முகப்பு

jeudi 16 décembre 2010

பிறப்பாயோ இயேசு பாலா


பிறப்பாயோ இயேசு பாலா

வார்த்தையுமே மனுவுருவாய் - வாழ்வின்
இருளகற்றும் ஒளிப்பிளம்பாய்
அருள் மழை பொழியும் இறைமகனாய் - மானிடர்
இடர் நீக்கும் அருட்பொழிவாய்
பொங்கும் மனம் அமைதிபெற
கொதிக்கும் உள்ளம் குளிரடைய
கதிரவனாய் கார்முகிலாய்
அருள்பொழியும் அருளூற்றாய்
அவதரித்தார் இவ்வுலகில் கிறிஸ்து என்னும் யேசுபாலன்

போரினாலே புலம் பெயர்ந்து - வாழ்வில்
போற்றிச் சேர்த்த பொருழிழந்து
அசைந்தாடிய அங்கமிழந்து
அங்கவீனராய் அவலமுற்று
அகதிகளாய் அநாதைகளாய் - எம்மண்ணில்
அவலத்தோடு அமைதியிழந்து
வரட்சியுற்ற உள்ளங்களில் பிறப்பாயோ இயேசு பாலா?

உடலிழந்து உறவிழந்து
உண்மையிலே உயிர் இழந்து
உலகமயமாக்கலிலே உண்மை வாழ்வின் பொருளிழந்து
நாகரீகமென்னும் நாமத்திலே நாளுக்கு நாள்
நன்மை தரும் உண்மைகளை பொய்மையினால் அலங்கரித்து
நடைப்பிணமாய் நலமிழந்து வாழுகின்ற எம் மண்ணில்
நலமிகவே பொழிந்து நீயும் பிறப்பாயோ இயேசு பாலா?


யாவருமே சோதரராய் -மண்ணில்
யார் குலமும் ஓர் குலமாய்
ஓர் உலகம் ஓர் குடும்பம் ஆகிடவே
ஒற்றுமையின் கூரையின் கீழ் வாழ்ந்திடவே
வேற்றுமைகள் இல்லை எம்மில் -இனியும்
வேதனையின் நாமம் இல்லை
ஒருமித்து மகிழ்வுறவே, ஒன்றித்து வாழ்ந்திடவே
ஒற்றுமையின் ஒன்றிப்பால் - உலகில்
இறையாட்சி மலர்ந்திடவே
வந்துநீயும் பிறப்பாயோ இயேசு பாலா

நன்றி.....

Aucun commentaire:

Enregistrer un commentaire