முகப்பு

mardi 24 janvier 2017

வாழ்க்கையில் எல்லோரும் ஒன்றுதான்!



வாழ்க்கையில் எல்லோரும் ஒன்றுதான்!
20வயசுக்கு அப்புறம், வெளிநாடும், தன்நாடும் ஒண்ணு தான் (எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்)
30வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்)
...
40வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க)
50வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் வந்துரும்)
60வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்)
70வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் ( முட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்சம் இடத்தில் மட்டுமே புழங்க முடியும்)
80வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்..(அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்)
90வயசுக்கு அப்புறம் ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான் (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்)
100வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது)
என் வாழ்க்கையும், உங்க வாழ்க்கையும் ஒண்ணு தான்...
அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..
என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு துயரப்படுறத விட்றுவோம்!

jeudi 19 janvier 2017

கொழுந்துவிட்டு எரியும் ஜல்லிக்கட்டு போராட்டம்



கொழுந்துவிட்டு எரியும் ஜல்லிக்கட்டு போராட்டம்.


வாய்மூடி மெளனியாக இருக்கும் அரசியல்வாதிகள்

மக்களின் வாழ்வை சரிப்படுத்தவே சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் இல்லை


இன்று தமிழகம் முழுக்க பற்றி எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனை ஜல்லிக்கட்டு.

ரோம் நகர் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது பிடில் வாசித்து கொண்டிருந்த மன்னன் போல, தமிழகமே போர்க்களமாகியுள்ள இந்த நேரத்தில் முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது தெரியவில்லை
கடந்த இரண்டு ஆண்டுகளை போல இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்துவது ஒருசில தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழினமே களத்தில் இறங்கியுள்ளது. ஐடி ஊழியர்கள் முதல் நர்சுகள் வரை, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என அனைவரும் தமிழ் உணர்வுடன் களத்தில் இறங்கியுள்ளனர். ஒருவகையில் தமிழர்கள் அனைவரையும் ஒற்றுமையாக்கிய நமது எதிரிகளுக்கு நாம் நம்முடைய நன்றியை தெரிவித்து கொள்ள வேண்டும்

பீட்டா அமைப்பு கொடுத்த ஒருசில வீடியொ ஆதாரங்களை மட்டுமே கருத்தில் கொண்டு ஜல்லிகட்டுக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். ஆயிரக்க்கணக்கான வருடங்களின் கலாச்சாரம், பண்பாடு, தமிழர்களின் உணர்வுகள் ஏதேனும் அந்த நீதிபதிகளுக்கு தெரியுமா? இவற்றையெல்லாம் தெரிந்த ஒரு நீதிபதி தடை போட முன்வருவாரா? என்ற கேள்வியே பலருக்கு எழுகின்றன
சேது சமுத்திர திட்டம் குறித்த வழக்கில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து தீர்ப்பு அளித்த நீதிமன்றம், விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு தடை கேட்ட வழக்கில் வழிபாட்டு வழிமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பு அளித்த நீதிமன்றம், தற்போது கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தடை போட்டது ஏன் என்பதுதான் ஆறு கோடி தமிழர்களின் கேள்வியாக உள்ளது.

திவாகரன் கட்சிக்கு என்ன செய்தார்? என்று ஒரு அமைச்சர் கேள்வி கேட்டவுடன் 32 அமைச்சர்களும் மாறி மாறி அவருக்கு பதில் கூறி கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த அமைச்சர் பதவியில் ஓட்டு போட்டு உட்கார வைத்த தமிழக மக்கள் போராட்டம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அனைத்து அமைச்சர்களும் மெளனம் காப்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தினால் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூறும் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தண்ணீர் தரமுடியாது என்று கூறிய கர்நாடக அரசை ஏன் கலைக்கவில்லை? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசை ஏன் கலைக்க சொல்லவில்லை சுப்பிரமணியன்சுவாமி?

மக்களின் வாழ்வை சரிப்படுத்தவே சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் இல்லை. மாடுகள் கொடுமைப்படுத்துவதற்காக தடை போட்ட நீதிமன்றம், இன்று மனிதர்கள் மேல் தடியடி நடத்தி கொடுமைப்படுத்தும் காவல்துறையிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை. தடியடி நடத்தும் அளவுக்கு போராட்டக்காரர்கள் என்ன தீவிரவாதிகளா? போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர், அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் கிட்டத்தட்ட இரண்டாவது ஜாலியன் வாலாபாக் படுகொலை போல நேற்று அலங்காநல்லூரில் நடந்துள்ளது. இதற்கு யார் காரணம்?
ஒவ்வொரு வருடமும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து வெளிநாட்டினர் வருவது வாடிக்கை. பொங்கல் சமயத்தின்போது கொடுக்கப்பட்ட விசாக்களை கணக்கிட்டால் உண்மை தெரியவரும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக சுற்றுலாத்துறைக்கு இந்த தடையால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, இதை மாநில அரசோ, அல்லது மத்திய அரசோ கவனித்ததா?
கனடா நாட்டின் பிரதமர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கனடாவில் தாராளமாக ஜல்லிக்கட்டை நடத்துங்கள் என்று கூறுகிறார். ஆனால் இந்திய பிரதமர் மட்டும் இந்த விஷயத்தில் மெளனம் காப்பது ஏன்?

72 நாட்கள் அப்பல்லோ முன்னாள் விடிய விடிய நின்று செய்தி சேகரித்த தொலைக்காட்சி ஊடகங்கள், தமிழர்களின் உணர்வு பூர்வமான ஒரு போராட்டத்தை இருட்டடிப்பு செய்வது ஏன்? யாருக்கு பயந்து இந்த நடவடிக்கை. தமிழகமே கொந்தளித்து கொண்டிருக்கும் நிலையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்று ஒரு நடிகரின் பேட்டியை ஒளிபரப்புகிறது என்றால் இந்த போராட்டத்தை அந்த தொலைக்காட்சி என்ன நினைக்கிறது? வெறும் ஆயிரம் உறுப்பினர்கள் நடத்தும் நடிகர் சங்க தேர்தலை காலை முதல் இரவு முடிவு தெரியும் வரை நேரடி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சிகள் இன்று பதுங்குவதற்கு காரணம் பணமா? அல்லது பயமா?

எந்த ஊடகமும் எங்களுக்கு தேவையில்லை, எந்த அரசியல்வாதியும் எங்களுக்கு தேவையில்லை, ஜாதி, மத, இன வேறுபாடின்றி நடைபெற்று வரும் அமைதியான இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். அந்த வெற்றியை பகிர்ந்து கொள்ள தயவு செய்து எந்த கட்சியும் வரவேண்டாம். இந்த போராட்டம் வெற்றி பெற்றால் அந்த வெற்றிக்கு முழு பொறுப்பு தமிழக இளைஞர் பட்டாளம்தான் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்

இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு தடைக்காக மட்டும் அல்ல. பீட்டாவை ஓட ஓட இந்தியாவை விட்டு விரட்டுவதற்கும்தான். ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றவுடன் தமிழர்களின் அடுத்த குறி பீட்டாதான். பீட்டாவே இந்தியாவை விட்டு வெளியேற தயாராக இரு…

இணைந்திருக்கிறோம்



தமிழர் மரபு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கக்கோரி போராடிக்கொண்டிருக்கின்ற தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம் (-sountha -France )

ஏறுதழுவுதல்



சங்க காலம் தொட்டே தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்தமைக்கான ஆதாரங்கள் ..
சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டுதல்
மாடு தழுவல் , போன்ற பெயர்களால் ஜல்லிக்கட்டு இடம்பெற்றுள்ளமை ஆதாரப்படுத்த பட்டுள்ளது . சங்க காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது.
குலதெய்வம்: பெருமாள் ( மாயோன்)
...
சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறுதழுவுதல்
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய – உயிர்துறந்து
நைவாரா ஆய மகள் தோள்.
என்றுரைக்கிறது.
அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: “கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்.” என்பதாகும். பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.
வரலாறு–
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 3000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது.
சல்லிக்கட்டு பெயர்க்காரணம்–
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது
தமிழரின் பல்லாயிரம் ஆண்டுகால ஏறு தழுவுதல்
தமிழர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
கொண்டாட்டங்கள் தமிழர்களின் பரம்பரை அடையாளங்கள்.
தமிழர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்