முகப்பு

samedi 23 juillet 2016

எல்லாம் என் நேரம்



    என் மனசுல உள்ளது
    மட்டும் தான் 
    நான் பேசுவேன்
    சில நேரம் தப்பா
    போகும்...
    சில நேரம் சிலருக்கு
    புரியாது.
    எல்லாம் என் நேரம்.

குழந்தை


குழந்தையாகவே

    இருந்திருக்கலாம்
    குறைகள் எதுவும்
    தெரியாமலேயே..

விலக வைத்து விடுகிறது



    கோபத்தில் பேசும் போது
    நம்மை அறியாமல் வரும் சில
    வார்த்தைகள் உயிரான உறவையும்
    நமக்கே தெரியாமல்விலக வைத்து விடுகிறது

ஏமாற்றம்


  1. அளவுக்கு அதிகமான பாசத்துக்கும் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பிற்க்கும் கிடைக்கும் சிறந்த பரிசு ஏமாற்றம் மட்டுமே

mercredi 13 juillet 2016

தாத்தா!



ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி பகவத்கீதையை படித்துக்கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன்
பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டே இருந்தான். ஒரு நாள் அவரிடம்
வந்து கேட்டான் , " தாத்தா! எப்பப்பாத்தாலும் இந்த புத்தகத்தையே
படிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனை நாளா படிக்கிறீங்க?" என்றான்.
பெரியவர் சொன்னார்,

" ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் ".
"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க ?" என்றான்.
தாத்தா சிரித்தபடி கூறினார்,
" எனக்கு ஒரு உதவி செய். நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்".
இளைஞன் கேட்டான்,
" என்ன உதவி தாத்தா? "
பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை
எடுத்தார். அதில் அடுப்புக் கரி இருந்தது. அதை ஒரு மூலையில்
கொட்டினார். பல நாட்களாகக் கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின்
உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.

பெரியவர் சொன்னார்,
" தம்பி, அதோ இருக்குற பைப்புல இருந்து இந்தக் கூடையில கொஞ்சம்
தண்ணி பிடியேன்"
இளைஞனுக்கு சிரிப்பு வந்தது.
இருந்தாலும் பெரியவர் சொல்லி விட்டதால் எடுத்துச் சென்று தண்ணீர்
நிரப்பி எடுத்து வந்தான். அவன் வந்து சேருவதற்கு முன்பே எல்லா நீரும்
தரையில் ஒழுகிப்போனது. பெரியவர் சொன்னார்,

" இன்னும் ஒரு முறை " . இளைஞன் மீண்டும் முயன்றான். ஆனால் மூங்கில்
கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்?
மீண்டும் சிந்திப் போனது. பெரியவர் கேட்டார்,
" தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் " . இளைஞன் ஒரு
முடிவுக்கு வந்தான்.
"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல்
ஓடிவிடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப்படித்தால் எனக்கென்ன வந்தது? "
தண்ணீர் பிடித்தான். வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில்.
" தாத்தா, இந்தாங்க உங்க கூடை. இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத்
தெரியுமா தெரியாதா? எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்தினிங்க "
என்றான்.

அவர் புன்னகையோடு சொன்னார்,
" இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும் தெரியும். நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப்
போகும் போது இதோட உட்புறம் எப்படி இருந்தது? " என்றார்.
இளைஞன் சொன்னான் ,
" ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது "
"இப்போ பார் "என்றார்.

தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது.
பெரியவர் சொன்னார்,
" தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான். எத்தனை முறை தண்ணீர்
பிடிச்சாலும் மூங்கில் கூடை நிரம்பவே இல்லை. ஆனாலும் ஒவ்வொரு
முறையும் கூடை சுத்தமாயிடிச்சு.

அது போலத்தான் எத்தனை முறை படிச்சாலும் முழு
பகவத்கீதையும் மனப்பாடம் ஆயிடும்னு சொல்ல முடியாது. ஆனா படிக்கிற
ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும், கறையும்
சுத்தமாகிக்கிட்டே இருக்கும்" என்றார். 

நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும் ?


ஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள் , நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும் ? என்று சொல்லித் தாருங்கள் என்றான் .

அதற்கு அவர்

அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான் .

அலங்கோலமானவளை முடிக்காதே! உனக்கே அவள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் .

உயரமானவளை முடிக்காதே! நீ எட்டி பார்க்க வேண்டி வரும் .

குட்டையானவளை முடிக்காதே! அவளுக்காக தலை குனிய வேண்டி வரும்.

பருமனானவளை முடிக்காதே !உன் மேல் முட்டினால் காயம் ஏற்படும்

மெலிவானவளை முடிக்காதே! உன் கண்ணுக்கு அவளைக் காண மாட்டாய்

வெள்ளையானவளை முடிக்காதே ! மெழுகுவர்த்தி தான் ஞாபகத்துக்கு வரும்

கறுத்தவளை முடிக்காதே! இருட்டில் பேய் என்று பயப்படுவாய்

படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்

படித்தவளை முடிக்காதே! உன்னிடம் விவாதத்துக்கு வருவாள்

பணக்காரியை முடிக்காதே ! எடுத்ததற்கெல்லாம் எனது பணம் என்பாள்

ஏழையை முடிக்காதே! உனது மரணத்தின் பின்னர் உனது குழந்தை சிரமப்படும்

அதிகம் அன்பானவளை முடிக்காதே! உன் மரணத்தின் பின் வேறு ஒருவனிடம் அன்பு திரும்பி விடும்

கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகி விடும்

அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உண் பணத்தை கரைத்து விடுவாள்

ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாகி விடுவாய்

அமைதியானவளை முடிக்காதே! நீ செத்தாலும் அமைதியாகவே இருப்பாள்

ஆர்ப்பரிப்பவளை முடிக்காதே! ஒரு பூச்சிக்கும் ஊரைக்கூட்டி விடுவாள்

ஊருக்குள் முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் பார்க்கப்போவாள்

தூரத்தில் முடிக்காதே உன் வாழ்க்கை பிரயாணத்தில் கழியும்

என்று உபதேசித்தார்

வந்த வாலிபன் ஏன் பெரியவரே சுருக்கமாக திருமணமே முடிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே
என்றான் கோபத்துடன்....

திருந்த வேண்டியது நாம்தான்


ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்.
அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது.
பல ஊர்களிலிருந்து மிகப்பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்னியாசி வந்தார்.
அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.
அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான்.

அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான்.
தலைவலி குணமாகி விட்டது.
சன்னியாசி கூறியது சரிதான்.
உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான்.
வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே!

நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.

அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள்.
சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.

சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள்.

சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார்.
பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை உபசரித்தான்.

“இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார்.

“ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு. “நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி. “பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான்.

“மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம்.
ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி😎 வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது.
உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி.
நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம்.
நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்.
அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது

vendam


uyerr


unnai


அனுபவமே குரு!



கதை சொல்லப் போறேன்...

அனுபவமே குரு!

ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார்.

இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!

முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல, தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்!

சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.

மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழு ஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை.

ஏதோ ஒருபொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார். ‘வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது?’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!

வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி.

வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார்.

‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.

மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. ‘என்ன கொடுமை இது? இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே... இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே'
என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.

பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது.

*நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம*்

பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்!

‘இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.

நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம்.

நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும்தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன

*ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனைதரும் என்பது யாருக்குத் தெரியும?*🙏

அன்பை விதையுங்கள், அதையே அறுவடை செய்வீர்கள் !..



ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.
பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த
பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,
இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம்
கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.

உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு, இல்லையேப்பா, நல்லா தானே இருக்கு" என்பார், உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம், "ஏங்க.. பழங்கள் நல்லா இனிப்பாக தானே உள்ளது, என் தினமும் இப்படி நல்லா இல்லைனு
சொல்லி டிராமா போடறீங்க" என்று கேட்ப்பார்.

உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம், அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறார், ஆனாலும் தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட மாட்டார். நான் இப்படி குறை கூறி கொடுப்பதால் தினம்
அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுகிறார் என்றார்.

தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி
வியாபாரி கவனித்து விட்டு, அந்த பாட்டியிடம், அந்த ஆள் தினமும் உன்
பழங்களை குறை கூறுகிறான், இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை
அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய் எனக் கேட்கிறான்.

உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு, அவன் என்னை தினமும் ஒரு பழத்தை
சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி
கொடுத்து சாப்பிட வைக்கிறான். இது எனக்கு தெரியாது என்று
நினைக்கிறான், நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை மாறாக அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது என்றார் அன்போடு.

இப்படி சின்ன சின்ன அன்பில் தானேங்க
ஜீவன் இன்னும் இருக்கு !!.. ...

அன்பை விதையுங்கள், அதையே அறுவடை செய்வீர்கள் !..

இதேபோலத்தான் நம் வாழ்விலும் சிலசமயம் நடக்கிறது, இல்லையா?



இதேபோலத்தான் நம் வாழ்விலும் சிலசமயம் நடக்கிறது, இல்லையா?


“ஒரு நாள் வழக்கம்போல அவன் ஜாகிங் செய்துகொண்டிருந்த போது, அவனுக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தான். அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தார் என்று தோன்றியது இவனுக்கு.

சட்டென்று மனதில் ஒரு எண்ணம். அவரை முந்திக் கொண்டு ஓடவேண்டும் என்று ஒரு உந்துதல். அவன் வீட்டுக்குப் போவதற்கு இன்னும் நான்கு ஐந்து தெருக்கள் தாண்ட வேண்டும். அதற்குள் அவரை பிடித்து விடலாம் என்று நினைத்து வேகமாக ஓட ஆரம்பித்தான்.

மெதுமெதுவே அவரை நெருங்கிக் கொண்டிருதான். அவரை முந்துவதற்கு இன்னும் சில 100 அடிகளே இருந்தன. அவன் வேகத்தை சட்டென்று கூட்டினான். இப்போது அவனைப் பார்ப்பவர்கள் அவன் ஏதோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டிருக்கிறானோ என்று நினைப்பார்கள்! அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் ஓடி…… ஓடி……..அவரைப் பிடித்தே விட்டான் கடைசியில்! உள்ளுக்குள் ஒரு பெருமிதம்!
‘அப்பாடி, முந்தி விட்டேன்!’

பின்னால் திரும்பிப் பார்த்தான். அவர் போக்கில் அவர் வந்து கொண்டிருந்தார். அவருக்கு அவன் அவருடன் போட்டி போட்டதே தெரியாது!
சந்தோஷம் சற்று அடங்கிய பின் தான் அவன் தன் பாதையை தவற விட்டு விட்டதை உணர்ந்தான்! அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஓடிய அவன், தான் திரும்ப வேண்டிய தெருவை விட்டு விட்டு ஆறு தெருக்கள் தாண்டி வந்து விட்டான். இப்போது வந்த வழியே திரும்பி அத்தனை தூரத்தையும் கடந்து தன் வீட்டிற்கு போக வேண்டும்.

இதேபோலத்தான் நம் வாழ்விலும் சிலசமயம் நடக்கிறது, இல்லையா?
நம்முடன் வேலை செய்பவர்களுடனும், அண்டை அயலில் இருப்பவர்களுடனும், நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் போட்டி போட்டு அவர்களை மிஞ்ச வேண்டும் என்றோ, அல்லது அவர்களை விட நாம் பெரியவர்கள் என்றோ நிரூபிக்க முயலும் போதும் இதே தான் நடக்கிறது இல்லையா?
நம்முடைய நேரத்தையும் சக்தியையும் மற்றவர்களை விட வெற்றிகரமானவர்கள், முக்கியமானவர்கள் என்று நிரூபிப்பதிலேயே செலவழிக்கிறோம். நம்முடைய பொறுப்புகளை மறக்கிறோம். நாம் பயணம் செய்ய வேண்டிய பாதைகளை மறக்கிறோம். நமக்கென்று கடவுள் கொடுத்திருக்கும் வேலைகளை செய்யத் தவறுகிறோம்.

இந்த மாதிரியான ஆரோக்கியமில்லாத போட்டி முடிவில்லாத ஒரு சுழல். இந்தச் சுழலில் மாட்டிக் கொண்டுவிட்டால் வெளியே வருவது கடினம்.
எப்போதுமே நம்மைவிட சிலர் முன்னால் இருப்பார்கள்,
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த அளவு நல்லவர்களாக இருக்க நம்மால் இருக்க முடியும், யாருடனும் போட்டி போடாமலேயே!

வாழ்க்கையில், பிறருடன் அனாவசிய போட்டியை தவிர்த்து நம் வாழ்க்கையை வாழ்வதில் கவனம் செலுத்துவோம்.
எல்லோரையும் துரத்துவதே வாழ்க்கை என்று நினைத்து சொந்த வாழ்க்கையை தொலைக்காமல் இருப்போம்.

dimanche 10 juillet 2016

வாழ்க்கையின் அர்த்தம்!



நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான்.
கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும்.
...
ஒரு சமயம்,
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான்.
ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும்.
அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள்.
அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.
ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான்.
ரயில் வருகிற நேரம்...
ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.
பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.
தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.
காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள்.
அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.
"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான்.
ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.
முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...
செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான்.
ஆகவே நாம், நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!