முகப்பு

samedi 15 août 2015

தமிழர் நாட்டுப்புறக் கலைகள்


தெருக்கூத்து-thamil.co.uk
தெருக்கூத்து
தமிழகத்தின் மிகப்பழமையான அரங்கக் கலை வடிவம் தெருக்கூத்து ஆகும். தெருக்களையே ஆடுகளமாகக் கொண்டு நிகழ்த்தப்படுவதால் தெருக்கூத்து எனப்பெயர் பெற்றது.  ஒரு கதையைப் பாடியும் ஆடியும் உரையாடியும் நடித்தும் நிகழ்த்தப்படும் கலையாக இது விளங்குகிறது.
சிலபகுதிகளில் தெருக்கூத்து நடிகர்கள் தலைக்கிரீடம், புஜக்கட்டை இவற்றை ஒப்பனைப் பொருளாக அணிவதால் கட்டைக் கூத்து எனவும் வழங்கப்படுகின்றது. சில பகுதிகளில் இத்தகைய ஒப்பனை இல்லாமலும் தெருக்கூத்து நிகழ்த்தப்படுவதுண்டு.
தெருக்கூத்தில் எடுத்துரைக்கப்படும் கதைப் பொருளிற்கேற்ப ஒப்பனைகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆண்களே பெண் வேடமிட்டு நடிக்கின்றனர். கட்டியக்காரன் என்ற நகைச்சுவைப் பாத்திரம் தெருக்கூத்தில் மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்.
வடார்க்காடு, தென்னார்க்காடு, செங்கல்பட்டு, வேலூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெறும் திரௌபதையம்மன் விழாக்களின் போது வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாகத் தெருக்கூத்து இடம்பெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் மகாபாரதக் கதைச் சம்பவங்களே கூத்தாக நிகழ்த்திக் காட்டப்படுகின்றன.
பகல் வேடம்பகல் வேடம்
புராணக் கதை மாந்தர்களைப்போல வேடமிட்டுப் பகல் நேரங்களில் வீடுவீடாகச் சென்று பாடல்பாடி உரையாடி நிகழ்த்தப்படும் கலையாகப் பகல் வேடம் விளங்குகிறது. பகலில் வேடமிட்டு நிகழ்த்தப் படுவதால் இது பகல் வேடம் என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் கதை எடுத்துரைக்கப் படாமல் செல்லும் இடமெல்லாம் உதிரியாகப் பாடல்களைப் பாடிச் செல்லும் நடமாடும்  நிகழ் கலையாக இது உள்ளது.
கிருஷ்ணர், இராமர், சீதை, அனுமராக வேடம் புனைந்து இராமாயணம், மகாபாரதக் கதைச் சம்பவங்களைப் பாடியும் உரையாடியும் நடித்தும் எடுத்துரைத்துச் செல்வர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குல்லுக்கவர நாயுடு என்ற  இனத்தாரே இக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலாவணி-thamil.co.ukஇலாவணி
தஞ்சை மராட்டியர் ஆட்சிக்காலத்தில் மராட்டிய மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த கலைவடிவம் இலாவணி ஆகும். இலாவணி என்றால் நடுதல் என்ற பொருள். மராட்டியத்தில் நாற்று நடும்போது காமச்சுவை ததும்பப் பாடப்படும் பாடல்களை இலாவணி என்று அழைப்பதுண்டு. அதுவே தமிழ்ப் பெயராகவும் நிலைத்து விட்டது.
தமிழகத்தில் காமன் கோயில் வழிபாட்டோடு தொடர்புடையதாக இலாவணி நிகழ்த்தப்படுகிறது. மன்மதன் எரிந்தான் என ஒரு கட்சியினரும், மன்மதன் எரியவில்லை என ஒரு கட்சியினரும் வாதிடுவதாக இலாவணிப்பாடல் அமைந்திருக்கும். டேப் என்ற தோலிசைக் கருவியினை இசைத்துக்கொண்டு ஒரு பிரிவினர் தங்களது வாதத்தினைப் பாடலாகப்பாட, அடுத்த பிரிவினர் அதற்குப் பாடலிலேயே பதில் கூறுவதாக இலாவணி நிகழ்ச்சி அமையும். இவ்வாறு வினாவிடைப் பாணியில் இலாவணி நிகழ்ச்சி விடியவிடியத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
திருச்சி, தஞ்சை மாவட்டப் பகுதிகளிலேயே இலாவணி நிகழ்த்திக் காட்டப்படுகின்றது. மன்மதன் கதை மட்டுமே இலாவணியில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இக்கலை இன்றைய நிலையில் மறைந்துகொண்டு வருகின்றது.
உடுக்கைப்பாட்டு-thamil.co.ukஉடுக்கைப்பாட்டு
உடுக்கை என்னும் இசைக்கருவியை இசைத்துக் கொண்டு ஒரு கதையைப் பாட்டாக எடுத்துரைப்பது உடுக்கைப்பாட்டு எனப்படும். கொங்குமண்டலப் பகுதிகளில் உள்ள கோயில் விழாக்களில், குறிப்பாக அண்ணமார்சாமி வழிபாட்டில், உடுக்கைப்பாட்டு சிறப்பிடம் பெறுகிறது. இறந்தோருக்காவும் ஆவிவயப்பட்டோரைக் குணப்படுத்துவதுற்கும் கூட உடுக்கைப்பாட்டுப் பாடும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக உள்ளது.
தலைமைப்பாடகர் உடுக்கினை இசைத்துக்கொண்டு பாட, இருவர் பின்பாட்டுப் பாடுவர். சில பகுதிகளில் ஆண்கள் பெண் வேடமிட்டு உடுக்கைப் பாட்டிற்கேற்ப ஆடுவதும் உண்டு.
கணியான் கூத்துகணியான் கூத்து
கணியான் என்னும் இனத்தாரால் மட்டுமே இக்கூத்து நிகழ்த்தப்படுவதால் கணியான் கூத்து என வழங்கப்படுகிறது. கணியான் கூத்தில் மகுடம் என்னும் தோலிசைக் கருவி சிறப்பிடம் பெறுவதால் மகுடாட்டம், மகுடக்கச்சேரி எனவும் சுட்டப்படுவதுண்டு.
தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுடலைமாடன் கோயில் வழிபாடுகளில் சடங்குக் கலையாகக் கணியான் கூத்து நிகழ்த்தப்படுகிறது.
மகுடச்சத்தம் கேட்டாலொழிய மாடன்பூசை கொள்வானோ என்ற வழக்காறு சுடலைமாடன் வழிபாட்டிற்கும் கணியான் கூத்திற்கும் உள்ள உறவை உணர்த்தும்.
தலைமைப்பாடகர் ஒருவர் (அண்ணாவி என அழைக்கப்படுவார்). மகுடம் வாசிப்போர் இருவர், ஆட்டம் ஆடும் பெண்கள் இருவர் (ஆண்களே பெண் வேடமிட்டு ஆடுவர்), ஒரு பின்பாட்டுக்காரர் என்று ஆறுபேர் கணியான் கூத்தில் இடம்பெறுவர்.
அம்மன் கூத்து-thamil.co.ukஅம்மன் கூத்து
அம்மன் கூத்து என்பது, அம்மனைப் போல் வேடம் புனைந்து ஆடுவதாலும், அம்மன் கோவில்களில் ஆடுவதாலும் அம்மன் கூத்து எனப் பெயர்பெற்றதோர் கூத்தாகும். இக்கூத்து கணியான் கூத்திற்கு, துணை ஆட்டமாகவும் கருதப்படுகிறது. இக்கூத்து பல மாவட்டங்களில் பெரிதும் விரும்பப்படுகிறது. இக்கலை, சடங்கு சார்ந்ததாகவும், அம்மனின் அருளைக் காட்டுவதாகவும் அமையும் ஒன்றாகும். அம்மன் கூத்து, இன்றும் நடைமுறையில் நிகழ்த்தப்படுவதாகும்.
வில்லுப்பாட்டு-thamil.co.ukவில்லுப்பாட்டு
வில் என்ற இசைக்கருவியைக் கோலால் அடித்து ஒலி எழுப்பிப் பாடியும் உரையாடியும் நிகழ்த்தப்படும் கலை வில்லுப்பாட்டு ஆகும். வில்லிசை, வில்லடிச்சான் பாட்டு என்றும் இது வழங்கப்படும். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள சிறு தெய்வக் கோயில்களின் வழிபாட்டில் வில்லுப்பாட்டு தவறாமல் இடம்பெறும்.
தலைமைப்பாடகர், பின்பாட்டுக்காரர், இசைக்கருவி வாசிப்போர் என்று வில்லுப்பாட்டுக் குழுவில் ஆறுபேர் இடம்பெறுவர்.
வில்லுப்பாட்டில் முதன்மை இசைக்கருவியாக விளங்குவது வில் ஆகும். நீளமாக அமையும் இந்த வில்லின் இருபுறமும் மணிகள் கட்டப்பட்டிருக்கும். தலைமைப்பாடகர் கையிலுள்ள கோல்களினால் வில்லினை அடிக்க இனிய இசை எழும்பும். வில்லுப்பாட்டில் மற்றொரு முக்கிய இசைக்கருவி உடுக்கை ஆகும். வெண்கலத்தாலான சிறிய உடுக்கையே வில்லுப்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. அடுத்துச் சிறப்பிடம் பெறுவன குடம் அல்லது பானைத்தாளம், ஆர்மோனியம், வில்லுப்பாட்டில் இடம்பெறும் பாடல்களும் அதற்கேற்ப அமையும் இசையும் கேட்போரை வெகுவாகக் கவரும்.
சிறுதெய்வக் கதைகள், இராமாயணம், சிலப்பதிகாரம், நாயன்மார் கதைகள், காந்திமகான் கதை போன்றவை வில்லுப்பாட்டில் எடுத்துரைக்கப் படுகின்றன. அரசின் திட்டங்கள், விழிப்புணர்வுக் கருத்துகள் போன்றவற்றை மக்களிடையே பரப்பும் பணியில் வில்லுப்பாட்டு முக்கிய பங்காற்றி வருகின்றது.
ஒயிலாட்டம்-thamil.co.ukஒயிலாட்டம்
கிராமத்து இளைஞர்களால் பாடலுடன் நேர்வரிசையில் ஆடப்படும் ஆட்டம் ஒயிலாட்டம் ஆகும். ஒயில்கும்மி, இராமாயணக் கும்மி என்ற பெயர்களில் இது அழைக்கப்படுகின்றது. பெண்கள் ஆடும் வட்டக் கும்மியிலிருந்து ஒயில்கும்மி வேறுபட்டதாகும். ஒயில் என்றசொல்லுக்கு ஒய்யாரம், அழகு, நளினம், சாயல், அலங்காரம் என்று  அகராதிகள் பொருள் தருகின்றன. ஒய்யாரம் என்பதற்குக் கம்பீரம், எடுப்பு (Majestic) என்ற பொருளைத் தற்காலத் தமிழ் அகராதி கூறுகிறது. ஒயிலாட்டம் ஆண்கள் ஆடும் ஆட்டமாக இருப்பதால் கம்பீரமும் எடுப்பும் மிக்க ஆட்டமாக விளங்குகிறது.
ஒயிலாட்டத்திற்கென்று தனித்த ஒப்பனை முறைகள் கிடையாது. ஆனால் கையில் வண்ணக் கைக்குட்டை பிடித்திருப்பதும் காலில் கெச்சம் (சலங்கை மணிகள்) அணிவதும் அவசியமாகும். வண்ணக் கைக்குட்டையை வீசிச் சுழற்றி ஆடும்போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இத்தனை பேர்தான் ஒயிலாட்டம் ஆடவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. ஆடத்தெரிந்த, ஆடும் விருப்பமுள்ள எவரும் கலந்து கொண்டு ஆடலாம். இராமாயணக் கதையைப் பாடிக்கொண்டு ஒரே வரிசையாகவோ, இரண்டு வரிசையில் நின்றோ ஆடுகின்றனர். ஒயிலாட்டி (ஒயிலாட்ட ஆசிரியர்) பாடலைப்பாட ஆட்டக்காரர்கள் பின்பாட்டுப் பாடிக்கொண்டே முன்னும் பின்னும் சென்று பலவகையான ஆட்டங்களை ஆடுவர், ஆடிக் காட்டுகின்றனர்.
மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டச் சிறுதெய்வக் கோயில் விழக்களில் ஒயிலாட்டம் ஆடப்பட்டு வருகின்றது.
சேவையாட்டம்-thamil.co.ukசேவையாட்டம்
கம்பளத்து நாயக்கரால் ஆடப்படும் ஆட்டம் சேவையாட்டம் ஆகும். சேவை என்றால் சேவித்தல், வணங்குதல் என்று பொருள்படும். இறைவனை ஆட்டத்தின் மூலமாக வணங்குவதால் இது சேவையாட்டம் எனப்பட்டது.
இராமாயணக் கதையைப் பாடலாகப் பாடிக்கொண்டு விடியவிடிய இவ்ஆட்டம் ஆடப்படும். தேவதுந்தமி, சேவைப் பலகை, சேமக்கலம் ஆகிய இசைக்கருவிகள் ஆட்டத்தின் போது பயன்படுத்தப்படும்.
சேவையாட்டக் கோமாளி பாடலைப்பாடி  ஆட்டத்தைத் தொடங்க, ஏனைய ஆட்டக்காரர்கள் பின்பாட்டுப்பாடி வட்டமாக ஆடி வருவர். திருமால், பெருமாள், ரெங்கநாதர் ஆகிய தெய்வங்களின் வழிபாட்டில் சேவையாட்டம் தவறாது இடம்பெறாது.
பொம்மலாட்டம்-thamil.co.ukபொம்மலாட்டம்
மரத்தால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளை இயக்கிக் காட்டி நிகழ்த்தப்படுவது பொம்மலாட்டம் ஆகும். தோற்பாவைக் கூத்திலிருந்து இது வேறுபட்டதாகும். கட்டை பொம்மைக்கூத்து, கட்டை பொம்மை நாடகம் என்ற பெயரிலும் இது வழங்கப்படும். கும்பகோணம், மயிலாடுதுறை, சேலம் ஆகிய பகுதிகளில் பொம்மலாட்ட சபா என்ற பெயரில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பொம்மைகளின் உறுப்புகள் கயிற்றால் தனித்தனியே இணைக்கப்பட்டுக் கலைஞர்களால் உரையாடலுக்கேற்ப இயக்கிக் காட்டப்படுகின்றன. கரகாட்டம், காவடியாட்டம், நெல் குத்துதல், கத்திச்சண்டை போடுதல் போன்றவை பொம்மையைக் கொண்டு செய்துகாட்டும் போது மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர். இராமாயணக் கதைகளே பொம்மலாட்டத்தில் பெரிதும் எடுத்துரைக்கப் படுகின்றன.
திரைப்படம் என்ற சாதனம் வருவதற்கு முன்பு தோற்பாவைக் கூத்தும் பொம்மலாட்டமுமே அரங்கக் கலையாக மக்கள் முன் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளன. திரைப்படம், தொலைக்காட்சி இவற்றின் தாக்கத்தால் இக்கலைகள் இன்று மறைந்து வருகின்றன.
தோற்பாவைக் கூத்து-thamil.co.ukதோற்பாவைக் கூத்து
பாவைக் கூத்து, தோற்பாவைக் கூத்து, தோற்பாவை நிழற்கூத்து என்ற பெயர்களில் இக்கலை வழங்கப்படுகிறது. தோலினாலான உயிரற்ற பாவைகளை உயிருள்ள மாந்தர்களாய் மாற்றிக் கலைஞர்களால் நிகழ்த்தப்படும் கூத்தாக தோற்பாவைக் கூத்து விளங்குகிறது. மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ராவ் என்னும் பிரிவினரால், குடும்பக் கலையாக இது நிகழ்த்தப்படுகிறது. திரைகட்டி அதன் பின்னே தோற்பாவைகளை இயங்கச் செய்து இக்கூத்து நிகழ்த்திக் காட்டப்படுகிறது.
தோற்பாவைக் கூத்தில் இராமாயணக் கதைகளே மிகுதியும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. சிறுவர்களை மகி்ழ்விப்பதற்காக உச்சிக்குடும்பன், உழுவத்தலையன் என்ற நகைச்சுவைப் பாத்திரங்களும் கிடாய்ச் சண்டை (ஆட்டுக்கிடாய்கள் சண்டையிடுவது) என்னும் நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன. தோற்பாவைக் கூத்து சீனாவில் தோன்றிப் பிறநாடுகளுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது.
அனுமன் ஆட்டம்அனுமன் ஆட்டம்
அனுமன் ஆட்டம் என்பது, இராமாயண அனுமனைப் போல் வேடம் புனைந்து ஆடும் ஆட்டமாகும். இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டமாகும்.  இவ்வாட்டமானது தமிழகத்தில் பரவலாகவும், தென் மாவட்டங்களில் வைணவ சாதியினர் வாழும் இடங்களில் சிறப்பாகவும் நிகழ்த்தப்படுகிறது. இது ஒரு கலையாகவும், தாளத்திற்கும், இசைக்கும் ஏற்ப ஆடப்படுகிறது.
அன்னக்கொடி விழாக் கூத்து
சிவனடியாரான சிறுத்தொண்டரின் கதையை பக்தி உணர்வுடன் நிகழ்த்தும் கூத்து வடிவிலான கலை அன்னக்கொடி விழாக் கூத்து ஆகும் அன்னம் என்றால் உணவு என்று பொருள். எனவே இவ்விழாவினை உணவு படையல் விழா என்றும் பொருள். சிறுத்தொண்டர் முக்தியடைந்த நாளான சித்திரைத் திங்கள் பரணி நட்சத்திர நாள் இதற்கு சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. இவ்விழா பெரும்பாலும் ஆற்றங்கரை ஏரி குளம் பொது நீர்நிலை போன்ற இடங்களிலேயிருந்தே தொடங்கும். இவ்விழாவினில் பங்கேற்பதன் மூலம் மகப்பேறு கிட்டும். கெட்ட ஆவியோ அல்லது நோயோ அண்டாது என்ற நம்பிக்கை இன்றளவும் மக்கள் மனதில் உள்ளது

Aucun commentaire:

Enregistrer un commentaire