முகப்பு

samedi 6 octobre 2018

விடை தெரியாத பாதையில் ...



வாழ்க்கையில்
சில நேரங்களில்
நான் இழந்து விட்ட
உறவுகளை நினைத்து
கண்ணீர் சிந்துவதும் உண்டு
என் வாழ்வு ஒருவித ஏக்கம்...
விடை தெரியாத பாதையில் ...

கேட்ட வரம்.



ஒரு ஊரில் ஒரு ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்கு கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகுநாட்களாக குழந்தையும் இல்லை.
ஒருநாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக்கிடந்த பெரிய மீனொன்று அவனைப்பார்த்து கெஞ்சியது:
"மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரியஅலையில் சிக்கி இந்த கரைப்பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்தமுடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே, என்னை பத்திரமாக ஆழ்கடலுக்கு கொண்டுபோய் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்" என்றது
மீனவன் அந்த மீனைத்தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகை செலுத்திக்கொண்டு போய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்கமுடியவில்லை. எனவே அவன் சொன்னான்:
"மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச்சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன்" என்றான்
மீனும், "நீ ஒரேஒரு வரம்தான் கேட்கவேண்டும்'' என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச்சென்றது. மீனவன் வீட்டுக்கு சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக்கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.
அவனது தந்தை கூறினார்:
"மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக்குடிசையில் தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்லவீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...'' என்றார்
அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்:
"மகனே, எனக்கு கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெறவேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...'' என்றார்
கடைசியாக மனைவி கேட்டாள்:
நமக்குத்திருமணம் ஆகி பலவருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒருகுழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்" என்றாள்
நன்கு யோசித்த மீனவன், மறுநாள், அந்த கடலுக்குச்சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவியின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?
விடை: "என் மகன் கீழே விளையாடி கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழவேண்டும்'' என்பதுதான் அவன் கேட்ட வரம்.

திரும்பத் தா இறைவா!



இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா!
இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்
இழந்தது எவை என இறைவன் கேட்டான்!
பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்
பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?
கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்
கோலம் மாறி அழகையும் இழந்தேன்
வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்
எதை என்று சொல்வேன் நான்
இறைவன் கேட்கையில்?
எதையெல்லாம் இழந்தேனோ
அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.
அழகாகச் சிரித்தான் இறைவன்
”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்"
"உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்"
"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"
"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"
சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.
திகைத்தேன்!
இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்
இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்
இறைவன் மறைந்தான்.

வாழ்க்கை



அது ஒரு கிராமம். சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. ’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது முதலை. ”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, “அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன. அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன. ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன. கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது. ‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும், ’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல். காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரிக்கிறது. உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை. முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது. சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது. கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல். தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர். சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது. உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான். உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனை குழப்பிவிடுகிறது. இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!.
முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!. அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம். வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை)எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை

மனமெனும்



நாமுண்டு
நம் வேலை
உண்டென்று
இருந்தாலும்
கூட
தேன்
கூட்டில்
கல்லெறிந்து
கலைப்பது
போல்
நம்
மனமெனும்
தேன் கூட்டை
சிலர்
சொல்
என்ற கல்லைக்
கொண்டு
கலைக்கவும்
செய்கின்றனர்!

அன்பு



அன்பு என்பது வாழவைப்பது..
ஆசை என்பது வீழச்செய்வது..
இரக்கம் என்பது அள்ளி கொடுப்பது..
ஈகை என்பது கொடுத்து மகிழ்வது..
உண்மை என்பது நிலைத்து நிற்பது..
ஊக்கம் என்பது உயரச்செய்வது..
எளிமை என்பது குணத்தால் வருவது..
ஏற்றம் என்பது உழைப்பால் வருவது..
ஐந்து என்பது திணைகளானது..
ஒன்று என்பது தெய்வமானது..
ஓசை என்பது எங்கும் நிறைந்தது..
ஒளவை சொன்னது மேன்மை வாய்ந்தது.