முகப்பு

mardi 15 mai 2012

முள்ளி வாய்க்காலில்..

 
 
முள்ளி வாய்க்கால்
எறிகணைகள் சீறிவந்து
எருமைகள்போல் பாய்ந்தன
தறிகெட்டு நெறிகெட்டு..
தடுமாறி ஓடியது மக்கள் கூட்டம் !

***

ஒருகையில் பிள்ளை
மறுகையில் துணிப்பை
இசையமைத்து..சென்றது..
தலைக்குமேல்
இரும்புகளின் ஊர்வலம் ...!

***

எறிகணை விழுந்து ஒருவர்
இருகாலில் ஒன்றை இழந்து
கதறிய ஓசை
காடெங்கும் அதிர்ந்தது..!

***

துணைக்குப் போக
மனம் சொன்னது.!.
பிணைக்குப் போனால்
பிணமாவாய் என்று
'பொஸ்பரஸ்' குண்டுகள்
சொல்லின.!

***

வேஷ்டியை அவிழ்த்து
தனகாலில் ..தானே
கட்டியது கிழம்..!
வேட்டை நாய்கள் விடவில்லை
பனையால் விழுந்தவனை..
மாடேறி மிதித்தன..!

***

துவிச் சக்கர வண்டிகள்..
மாட்டு வண்டிகளாகி
முதுகில் மூட்டைகளை
சுமந்து சென்றன..
கால்வெடிக்குப் பயந்து..
காலாட் படையொன்றின்
நீண்ட அணிபோல்
மக்களணி
வீதியுலாப் போயின.!.

புவிச் சக்கரத்தை
சுற்றிவந்த சூரியன்
கவிச் சக்கரவர்த்தி
கம்பனின் தமிழில்
மாலை வணக்கம் கூறி
விடை பெற்றது
பூமித்தாயிடம்!

***

ஓய்வுதேடி ...வீதியோரம்
உறங்கியவர்கள் மீது
பாய்ந்துவந்து
பந்து விளையாடின
பகைவனின் கொத்துக் குண்டுகள்.!
அங்கே உதை பந்தாட்டமா..
இல்லை
சதைப் பந்தாட்டமா.
நடந்தேறியது..?
புரியவில்லை..!
***

பிணங்களை அள்ளக்கூட பின்னர்
நாய்களும் ..நரிகளும்
வரவேண்டியிருந்தது..நள்ளிரவில்.!
அந்த..
கணங்கள் ஒவ்வொன்றும்..
மனங்களை மலடாக்கின..!

***

இருபத்தோராம் நூற்றாண்டிலா.
இரண்டாம் நூற்றாண்டிலா
இருக்கின்றோம் என்பதை
எவராவது
உறுதிப் படுத்துங்கள்..!

***

முள்ளி வாய்க்காலில்..
துள்ளி விளையாடிய..
முயல்களுக்கு கூட
மரண தண்டனை கொடுத்தது.
சிங்கள ராணுவம்.!.
அள்ளியள்ளி தமிழர் பிணங்களை
கொள்ளி வைத்து எரித்தது
வெறியர் கூட்டம் !

(மு.வே.யோகேஸ்வரன்)

Aucun commentaire:

Enregistrer un commentaire