முகப்பு

dimanche 27 mars 2016

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு விழா



    ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு விழா
    'நான் இறந்தொழியேன் உயிர் வாழ்வேன் - ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்' (திருப்பாடல்118:17) என்றுரைத்த வல்லமையின் தேவனில் நம்ப...ிக்கை வைத்துப் பேரொளியின் மகிழ்ச்சியில் அல்லேலூயா பாடிட ஆண்டவர் இயேசுவின் உத்தானப் பெருவிழா எம்மை அழைக்கின்றது.
    இறந்த பின்னர் ஆண்டவர் இயேசு மண்ணுக்குள் புதைக்கப் படவில்லை. மாறாக இவ்வுலகத்தைப் பாவத்தின் கட்டுக் களிலிருந்து மீட்டெடுப்பதற்காக விதைக்கப்பட்டு அதிகாலை வேளையில் புத்துயிர் பெற்று உத்தானமானார்.
    இவ்வுலகின் சக்திகளோ அல்லது பிரச்சாரங்களோ உயிர்த்த இயேசுவின் வல்லமையில் கட்டப்பட்ட கத்தோலிக்க திருச்சபையையும் அதனை வழி நடத்து பவர்களையும் எதுவும் செய்துவிட முடியாது என்பதற்கு நமதாண்டவரின் உத்தானத்திருவிழா சாட்சியம் கூறுகின்றது என்பது எனது பணிவான அபிப்பிராயம்.
    கிறிஸ்தவர்கள் என்று எம்மை அழைக்கும் நாம் கிறிஸ்து அவன் அல்லது கிறிஸ்து அவள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆண்டவர் இயேசுவோடு உத்தானமாகிய விதத்தினில் வாழுகின்றோமா?
    கொடிய யுத்தத்தின் பின்னர் பலவித கொடுமைகளையும் துன்பங்களையும் அனுபவித்துத் திரும்பி வந்த இலங்கைத் தமிழரான நாம் மறு பிறவி எடுத்துள்ளோம் என்று சொல்லித் திரும்பி வந்தாலும் திருந்தி வந்துள்ளோமா?
    நமதாண்டவர் இயேசு தம்மைச் சுற்றியிருந்த கட்டுக்களை அவிழ்த்து துணிகளைச் சுருட்டி வைத்துவிட்டு எழுந்து வந்தது போண்று நாமும் சாதியம் - பாகுபாடு என்ற எமது கட்டுக்களைச் சுருட்டி வைத்துவிட்டு புதிய மனிதர்களாக உத்தானமாகி உள்ளோமா?
    சுனாமி மற்றும் யுத்தகாலத்தில் பங்கரிலும் முகாம் வாழ்க்கையிலும் காணப்பட்ட சகோதர வாழ்க்கை இன்று ஏன் மறைந்துவிட்டது? பாலியல் வன்முறை போன்ற கொடூரச்செயல்கள் ஏன் உருவெடுத்துள்ளது?
    உயிர்தெழுந்த உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழுவோ மாயின் எதற்காக சாதியம் - தராதரம் என்று வேறுபாடுகள்? என்பதனை நாம் வேறு விதமாகச் சிந்திக்கவும் நமதாண் டவர் இயேசுவின் உயிர்ப்புத் திருவிழா எம்மை அழைக் கின்றது.
    ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பானது மனித சக்திகளால் கல்லைப் புரட்டி - காவலை மீறிக்கடந்து வரவில்லை. மாறாக நீதிக்கெதிரான பிரச்சாரங்களால் - உண்மைக் கெதிரான மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதைகளால் கட்டிவைக்க முடியாத உண்மையின் உயிர்ப்பாகக் கருதப்பட வேண்டியது.
    உயிர்த்த இயேசுவின் பிரசன்னம் மனித வல்லமையின் செயல்களுக்கு அப்பாற்ப்பட்ட இறைவெளிப்பாடாகக் காணப்படவேண்டும் - கத்தோலிக்க விசுவாசத்தில் உரமூட்டப்பட்டு வாழ்பவனை இவ்வுலகின் தீயசக்திகள் எதுவும் மேற்கொள்ள முடியாது எனக்கருதப்படவேண்டும்.
    மீட்பர் இயேசுவை ஆண்டவரென ஏற்றுக்கொள்ளும் நாம் அவர் வைக்கப் பட்டிருந்த கல்லறை வெறுமையாக இருப்பினும் - கல்லறையில் காணப்படாத ஆண்டவர் இயேசுவின் திருவுடல் எமது இதயக்கல்லறைகளில் புத்துயிர் பெறவேண்டும்.
    உயிர்ப்பின் முதற்செய்தியை மதகலா மரியா அறிவிப் பதனால் பெண்கள் ஆண்களைவிட வீரமும் துணிவும் அற்றவர்கள் என்ற மூட நம்பிக்கை உடைத்தெறியப்பட்டு பெண்ணடிமைக்கு எம்மில் புத்துயிர் வழங்கப்பட வேண்டும்.
    ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பால் புத்துயிர் பெற்றுள்ள நாம் தமது அன்பு மகனை எமது மீட்பராக தந்துள்ள பரலோக தகப்பனை அன்பு செய்வது மட்டுமல்ல அவரது சாயலாகப் படைக்கப்பட்டுள்ள எமது அயலவரையும் அன்பு செய்யவேண்டும்.
    ஆண்டவர் இயேசு கட்டியிருந்த துண்டுகளையும் -துணிகளையும் சுருட்டி வைத்துவிட்டு உத்தானமானது போன்று நாமும் எம்மைப் பிடித்துள்ள சாதியம் போன்ற மூட நம்பிக்கைகள் அவவிசுவாசக் கருத்துக்கள் என்ற துணிகளையும் - கட்டுக்களையும் சுருட்டி வைத்துவிட்டு போலி வாழ்வு என்ற கல்லறைகளிலிருந்து வெளியேற வேண்டும்.
    கத்தோலிக்க விசுவாசம் என்ற விளை நிலத்தில் விதையாக விழுந்து - புதிய விருட்சமாக வளர்ந்து எப்போதும் விழிப்பாக இருந்து சாத்தானுக்கு அடிமையா காதவாறு கிறிஸ்துவோடு உயிர் பெற்றெழுந்து மேலுலகு சார்ந்தவற்றை நாட இன்றைய நாளில் முடிவெடுப்போம்

Aucun commentaire:

Enregistrer un commentaire