முகப்பு

mardi 3 mai 2016

அனாதை



சமூகத்தில் அனாதைகளாக எவரும் பிறப்பதில்லை மாறாக உருவாக்கப்படுகிறார்கள்.
அனாதைக் குழந்தைகள் உருவாவதற்கு சமூகம் தான் காரணம் என்று நாம் தப்பிக்க முடியாது. தனிப்பட்ட ஒரு மனிதனின் அபிலாஷைகள்தான் இதற்கு காரணம்.
பிறந்தவுடன் அனாதைகளாக மாற 'ஏழ்மை' ஒரு காரணமாக இருந்தாலும், ஏழ்மை மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. பெரும்பாலான குழந்தைகள் அனாதைகள் ஆக தவறான தொடர்பு ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது என்கின்றது உலக சுகதார அமைப்பு.
பெற்ற குழந்தைகளை அனாதைகளாக விட ஆண்களைவிட பெண்களே இச்செயலை அதிகம் செய்கின்றனர்.
அனாதைகள் உருவாக யார் காரணம்?
சமூக கட்டுப்பாடுகள் குறைந்துவிட்ட இக் காலகட்டத்தில் உடல் வேட்கைக்காக கள்ளத்தனமாக இணையும் ஜோடிகள் அதிகரித்துள்ளனர். அவர்களது சொற்ப நேர சுகம், ஒரு குழந்தையை உருவாக்கி அனாதையாக்குகின்றது.
பெற்றெடுத்த குழந்தையை கோயில் வாசலில் போட்டுவிடுவது, இரயில் வண்டியில் வைத்துவிட்டு இறங்கி விடுவது, குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவது, அனாதை இல்ல வாசலில் போட்டுவிட்டு மறைந்துவிடுவது, ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் குழந்தையை துணியில் சுற்றி வைத்துவிடுவது, சிலர் மருத்துவமனையில் தவறான முகவரி தந்து குழந்தையை பெற்றெடுத்தப் பின்னர் ஓடிவிடுவது, கூட்டத்தில் அல்லது பொது இடத்தில் குழந்தை காணாமல் போவது என்று பல வழிகளில் குழந்தைகள் அனாதைகளாக்கப்படுகின்றனர்.
பெருகும் அனாதை இல்லங்கள்
அன்பற்ற வக்கிர உடல்களின் ஒருங்கிணைப்பால் உருவாக்கப்பட்ட இந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் பெயர் அனாதை.
இவர் விட்டுச்சென்ற இந்த குழந்தைகள் கடைசியாக சங்கமிக்கும் இடம் அனாதை இல்லம், இதனாலேயே அனாதை இல்லங்கள் பெருகிவருகின்றன.
ஒவ்வொரு அனாதை இல்லங்களுக்கு சென்று பார்த்தால் நமக்கு பல எண்ணங்கள் உருவாகும், இந்த குழந்தைகள் எங்கிருந்து வந்திருப்பார்கள்?. இவர்களது பெற்றோர் யார்? என்ன காரணத்தினால் இந்த குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டனர்.
எந்த ஒரு தாயும் ஒரு வாரத்திற்குள் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாது, குறைந்தது 10 மாதங்களாவது சுமக்க வேண்டும். ஊர் உலகத்திற்குத் தெரியாமல் யாரும் கர்ப்பம் சுமக்க முடியாது? அப்படி இருக்க. அதுவரை சுமந்துவிட்டு, பெற்றபின் ஏன் தெருவில் வீச வேண்டும். உடல் நோக சுமந்துவிட்டு, உதறி எறியலாமா? இதில் இந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தார்கள்,? அனாதைகள் உருவாக யார் காரணம். பெற்றோரா இல்லை சமூகமா? என்று மனதிற்குள் அடுக்கடுக்காக கேள்விகள் நம்மையே வாட்டும் என்பதில் ஜயமில்லை.
அனாதைகளே வேண்டாம் !!...
இந்த அனாதைகளை பார்க்கும்போது நம் மனதிற்குள் ஏதோ ஒரு இனம் புரியாத வலி வந்து போகும்போது, பெற்றோர் என்ற வார்தைக்கே அர்த்தம் தெரியாமல் வாழும் இந்த குழந்தைகளின் மனதில் தோன்றும் ஏக்கங்கள் தான் எத்தனை?
தலைவாரி, பூச்சூடி, ஆடை அணிவித்து, நிலா காட்டி சோறுட்டி, தூங்கவைக்க கதைகள் சொல்லி என்று எந்த நிகழ்வும் இவர்களுக்கு இல்லை.
அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, சித்தப்பா, அண்ணன், தங்கை என்று எந்த உறவுமில்லாமல் வாழும் இந்த குழந்தைகளை ஏன் உருவாக வேண்டும் என்று சமூகமும் கொஞ்சம் அக்கறை கொள்ளத்தான் வேண்டும்.
அனாதை இல்லங்களில் வளரும் குழந்தைகளுக்கு கூட ஏதோ மூன்று வேளை உணவும், உடுக்க துணிகளும் கிடைக்கின்றன. ஆனால் தெருவோரத்தில் வாழும் குழந்தைகள் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துகின்றன.
நாளடைவில் இந்த பிச்சை பிழைப்பானது, அடுத்தவர்களிடம் கைவரிசையை காட்டும் செயலான கொலை, கொள்ளை செயல்களாக மாறுகிறது.
அனாதைகள் உருவாக்கப்படுவதால் அவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை கூடவே சமூகமும் பாதிக்கப்படுகின்றது!
இன்னொரு குழந்தை அனாதையாக்கப்படாமல் பார்த்துக்கொள்வது நம் சமுதாய கடமை !...

Aucun commentaire:

Enregistrer un commentaire