முகப்பு

vendredi 14 septembre 2012

பகற் கனவு – அதிகாலைக் கனவு



பகற் கனவு – அதிகாலைக் கனவு
கனவு வருவதைப் பொறுத்து அதனைப் பகற்கனவு, அதிகாலைக் கனவு என்று வகைப்படுத்திக் கூறுவர். பெரும்பாலும் அனைவரும் கனவு காண்பர். சிலர் விழித்துக் கொண்டிருக்கும்போது கனவு கண்டு கொண்டிருப்பர். அவர்களைப் பகற் கனவு காண்பவர்கள் என்று குறிப்பிடலாம்.இவர்கள் எப்போதும் தங்களைப் பற்றியும் நடக்க முடியாத செயல்களைக் கறித்தும் கனவு கண்டு கொண்டே இருப்பர். இவர்கள் காணும் கனவுலகிலேயே சஞ்சரித்துக் கொண்டிருப்பர்.
இவர்களைச் சோம்பேறிகள் என்றும் மணற்கோட்டை கட்டுபவர்கள் என்றும் கூறுவர். கனவினைக் கண்டுகொண்டே இப்பண்புடையவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அதோடுமட்டுமல்லாது இவர்கள் எப்போதும் தாங்கள் கண்ட கனவினைத் தம் நண்பர்களிடம் கூறிப் பெருமையடித்துக் கொள்வர். நண்பர்கள்,
‘‘பகற்கனவு பலிக்காது’’ பார்த்துக்கொள்ளப்பா!
என்று இகழ்ச்சியாகக் கூறுவர். தேவையின்றி கனவு கண்டுகொண்டிருக்காது கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற வாழ்க்கை நெறியை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.
அதேபோன்று அதிகாலையில் காணும்கனவு பலிக்கும் என்பர். கண்ணகியும், கோப்பெருந்தேவியும் அதிகாலையில் கனவு காண்டிதால் அக்கனவு பலித்தது. அது காப்பியக் கனவு ஆகும். மக்களின் வாழ்க்கையில் நீண்ட காலமாக நிலவி வரும் இத்தகைய நம்பிக்கையை,
‘‘அதிகாலையில் காணும் கனவு பலிக்கும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இஃது மக்களின் நம்பிக்கை சார்ந்த பழமொழியாகும்.
ஊமையும் – கனவும்
வாய்பேச இயலாதவர்களை மூங்கையர், ஊமை என்று கூறுவர். இவர்களால் எதைக் கண்டாலும், கேட்டாலும் வாய்திறந்து மறுமொழி கூறமுடியாது. ஆனாலும் செய்கையில் கூறுவர். அதுபோன்று அவர்கள் கனவு கண்டாலும் அதனைப் பற்றிக் கூற முடியாது. இத்தகைய மாற்றுத்திறனாளியின் இயல்பினை,
‘‘ஊமை கனவு கண்டால் ஒருத்தருக்கிட்டேயும் செல்லாதாம்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
வாய் பேச இயலாதவர்கள் தங்களது உள்ளக்கிடக்கையைக்கூட கூற இயலாத நிலையில் உள்ளனர். அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கு நாம் மதிப்பளித்தல் வேண்டும் என்ற பண்பாட்டு நெறிமுறையையும் இப்பழமொழைி நமக்கு எடுத்துரைக்கின்றது.
நினைத்தல்
நினைத்தலை நெனப்பு, நினைப்பு என்றும் வழக்கில் கூறுவர். ஒருவன் மனதில் எண்ணும் எண்ணங்களையே நினைத்தல் என்பர். ஒரு பொருள் மனிதன், அல்லது தன்னைப் பற்றி ஒருவன் நினைக்கலாம். இந்நினைப்பு அதிகரித்துத் தலைக்கனமாக மாறிவிடக் கூடாது. மேலும் இந்நினைத்தல் தவறானதாக அமைதல் கூடாது. அங்ஙனம் தவறாக அமைந்திடில் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்பட்டு துன்புற நேரிடும். நம்முடைய வேலையையே கெடுத்துவிடும் தன்மை உடையது. அதனால் தான் நமது முன்னோர்கள்,
‘‘நெனப்புப் பொழைப்பைக் கெடுத்துவிடும்’’
என்று கூறினர்.
தகுதிக்கேற்ப நினைத்தல் வேண்டும். தகுதிக்கு மீறி இருந்தால் அது வாழ்க்கையை அழித்துவிடும். பிறருக்குத் தீங்கு செய்வதைப்பற்றி நாம் நினைத்தால் அது பிறருக்குத் துன்பத்தைத் தரும். அதனால் நல்லனவற்றை நினைத்து நல்லனவற்றைச் செய்தல் வேண்டும். நற் சிந்தனையை மனதிற்குள் வளரவிட வேண்டும் என்ற வாழ்வியலறத்தை இப்பழமொழி நமக்கு வழங்குகிறது.
நற்கனவுகண்டு, நல்லனவற்றை மட்டும நினைத்து நாமும் பிறரும் வாழ்வில் உயர வேண்டும். நல்லெண்ணங்கள் நமக்கும் பிறருக்கும் உன்னதமான வாழ்வைத் தரும். பலிதமாகும் கனவினைக் கண்டு பயன்தரும் கருத்துக்களை நினைத்துப் பயனுறு வாழ்க்கை வாழ்வோம் வாழ்வில் வசந்தம் வரும்.
 

Aucun commentaire:

Enregistrer un commentaire