முகப்பு

lundi 11 février 2019

படிப்பு




படிப்பு
வழக்கம் போல் அந்த இட்லி கடையில் நல்ல கூட்டம். காரணம், ருசி, சுகாதாரம் மட்டுமல்ல.. அங்கு வேலை செய்யும் அந்த இளவயசுப் பையனும்தான். கில்லி மாதிரி சுழன்று, சாப்பிட வருபவர்களையும், பார்சல் வாங்கிப் போகிறவர்களை யும், மின்னல் வேகத்தில் கவனித்து இன்முகத்துடன் அனுப்பி வைப்பான்.
இட்லி வாங்க வந்த பெரியவர் ஒருவர், பையனைப் பற்றி கடை முதலாளியிடம் விசாரிக்கத் தொடங்கினார்.
“என்ன சம்பளம் குடுப்பீங்க.. இந்த பையனுக்கு..?”
“எனக்கு கிடைக்கிற சொற்ப லாபத்துல என்னத்த குடுத்துடப் போறேன். சாயந்திரம் 7 மணியிலிருந்து 10 மணி வரை வேலை. போகும் போது இங்கேயே சாப்பிடச் சொல்லிட்டு,கையில் 50 ரூபா குடுத்தனுப்புவேன்..”
“ஹும்ம்.. படிக்க வேண்டிய வயசுல ஒழுங்கா படிச்சிருந்தா இந்த நிலமை வந்திருக்குமா? அப்ப எந்தப் பொண்ணு பின்னால சுத்தினானோ.. இப்ப எச்சில் தட்டை தூக்கறான்..” என்று பேசிக் கொண்டே போன பெரியவரை, கடைக்காரர் இடைமறித்தார்.
“நிறுத்துங்க. தெரியாம தப்பாப் பேசாதீங்க. அந்தப் பையனுக்கு பக்கத்து கிராமம். அப்பா,அம்மா ஏழை விவசாயிங்க. தன் மகன் படிச்சு இன்ஜினீயர் ஆகட்டுமேன்னு, ஆட்டை வித்து, காட்டை வித்து இங்கே டவுன் காலேஜ்ல படிக்க வச்சிருக்காங்க. அவனும், பெத்தவங்களுக்கு மேலும் கஷ்டம் குடுக்கக் கூடாதுன்னு, காலேஜ் முடிஞ்சதும் இங்கே வந்து வேலை செஞ்சு வயித்தை கழுவிக்கறான். அந்தப் பையனை போய்..”
பெரியவர் தன் பேச்சுக்கு வெட்கித் தலை குனிந்தபடி நடையை கட்டினார்!

Aucun commentaire:

Enregistrer un commentaire