முகப்பு

jeudi 19 janvier 2017

ஏறுதழுவுதல்



சங்க காலம் தொட்டே தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்தமைக்கான ஆதாரங்கள் ..
சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டுதல்
மாடு தழுவல் , போன்ற பெயர்களால் ஜல்லிக்கட்டு இடம்பெற்றுள்ளமை ஆதாரப்படுத்த பட்டுள்ளது . சங்க காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது.
குலதெய்வம்: பெருமாள் ( மாயோன்)
...
சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறுதழுவுதல்
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய – உயிர்துறந்து
நைவாரா ஆய மகள் தோள்.
என்றுரைக்கிறது.
அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: “கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்.” என்பதாகும். பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.
வரலாறு–
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 3000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது.
சல்லிக்கட்டு பெயர்க்காரணம்–
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது
தமிழரின் பல்லாயிரம் ஆண்டுகால ஏறு தழுவுதல்
தமிழர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
கொண்டாட்டங்கள் தமிழர்களின் பரம்பரை அடையாளங்கள்.
தமிழர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்

Aucun commentaire:

Enregistrer un commentaire