முகப்பு

lundi 19 décembre 2016

கிறிஸ்து பிறப்பு அன்றும்….... இன்றும்…… (ஓரு மனிதக் கண்ணோட்டம்)



கிறிஸ்து பிறப்பு அன்றும்….... இன்றும்……
(ஓரு மனிதக் கண்ணோட்டம்)

அன்று 2016 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேமில் மிக எளிமையாக இடம்பெற்ற குழந்தை இயேசுவின் பிறப்பு, இன்று உலகம் முழுவதும் இணைந்து கொண்டாடும் பெரு விழாவாக மாற்றம் பெற்றாலும், அந்த அதிசயம் மிக்க அற்புத நிகழ்வின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமா? அல்லது, இறைமகன் இயேசு வின் பிறப்பு என்றால், என்ன என்பதனை மறந்து வாழ்கி றோமா? என்பது எனது பணிவான அபிப்பிராயமாகும்.

தெய்வத்திருமகன் பெத்லகேமில் எதற்குமே பெறுமதி யில்லாத மாட்டுத் தொழுவத்தில் பிறந்த தால், இன்று பெத்லகேம் அகில உலகமும் போற்றும் ஒரு பரிசுத்த யாத்திரைத் தலமாகி. நாமும் அத்திருத்தலத்திற்கு யாத்திரையும் சென்றிருக்கலாம். ஆயினும், ஆண்டவர் இயேசு எமது உள்ளமெனும் மாட்டுத் தொழுவத்தில் பிறந்திட நாம் இடம் ஒதுக்காவிட்டால், எமது யாத்திரை மட்டுமல்ல, நாங்களும் பெறுமதியற்ற ஈனப்பிறவிகளே என்பதனை உனருகிறோமா?

இஸ்ராயேல் மக்கள் பல்லாயிரம் வருடங்களான தமது அடிமைத்தனத்திலிருந்து மீட்க மெசியா பிறப்பாரென எதிர்பார்த்ததாகத் திருவிவிலியம் பல இடங்களில் தெரிவிக்கின்றது. இன்றும் அதே மனிதன் தனது இனத்தின் விடியலைத்தேடி சொந்த நாட்டிலேயே அகதியானது மட்டுமல்ல, புலம் பெயர்ந்தும் அகதியாக அலைவது வரலாறாகப் பதிவாகவில்லையா?

மார்கழி நள்ளிரவில் பிறந்த குழந்தை தீவனத் தொட்டியில் வளர்த்தப்பட இடையரும், ஞானிகளும் தெண்டனிட்டு வணங்கினர். கடைசி இரா உணவில், “இது எனது உடல் வாங்கி உண்ணுங்கள்“ என்று தரப்படும் தீவனத் தொட்டி யின் ஆன்மீக உணவில் தகுதியோடு பங்கெடுக்கி றோமா? அந்தத் திரு உடலை ஈரைந்து மாதம் சுமந்த “அருள் நிறைந்த பேழை“க்கு மதிப்பளிக்கிறோமா?, அல்லது, நற்கருனைப் பேழையில் வீற்றிருப்பவரை பக்தியோடு பணிந்து, வணங்குகிறோமா?

அன்றைய மனிதன் பயங்கர விலங்குகளிலிருந்து பாதுகாக்க ஆயுதங்களை உருவாக்கினான். இன்றைய மனிதன் கொடிய மிருகங்களை செல்லப் பிராணி களாக்கி, தனது சொந்தச் சகோதரங்களையே கொண்றொழிக்கப் பல்வேறு ஆயுதங்களை உருவாக்கிப், பாவம் வந்து வீட்டு வாசலில் பாய்விரித்துப் படுத்திருக்க இடமளிக்கவில்லையா?

“உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” (லூக்கா 2:14) என்று வானதூதர்கள் பாடியது, உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் என்பதாகும். அமைதியை உருவாக்குவதே கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி என்பதை நாம் உணர்ந்திருந்தால், குழு சேர்த்து, சதி செய்துக் குழிபறிக்கும் முயற்சிகள், சாதிய முரண்பாடுகள் எம்மிடையே எதற்காக?

மார்கழிக் கடுங்குளிரில், பிரசவ வலியில் மரி அன்னை துடி துடித்தும், சத்திரத்திலும் இடம் கொடாது கதவை மூடிய மனிதர்களாக நாம் இன்றும் வாழவில்லையா? கொட்டும் மழையிலும், கொதிக்கும் வெய்யிலிலும், பனியின் குளிரிலும், பசியின் கொடுமையிலும் அபயம் தேடும் ஏழைகளின் உருவில் வரும் மரி அன்னை களுக்காக இதயக் கதவைத் திறப்போர் எத்தனை பேர்?

புனித நள்ளிரவில் மந்தைகளைப் பாதுகாக்க ஏழை இடையர் விழித்திருக்க, வரலாற்றை முன்னும் பின்னு மாகப் பிரித்த இறைமகன் இயேசு எமது வழிகாட்டும் விடிவெள்ளியாகப் பிறந்தார். ஆயினும், சொந்த உறவு களையே பிரித்தாளும் மனிதனின் கொடூர உள்ளத்தில் இரக்கம், கருணை,பரிவு, பாசம் என்ற “மனித நேய விடிவெள்ளி“ பிறந்துள்ளதா?

குழந்தை இயேசு, “உலகமெங்கும் சென்று என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுங்கள்” என்று கூறவில்லை. மாறாக, தெருவோரப் பிச்சைக்காரரிலும், தனிமையில் வாடும் முதியவரிலும், கவனிப்பாரற்ற நோயாளியிலும், துன்பங்களோடும், வேதனைகளோடும் சிறைகளில் சித்திர வதைப்படுவோர் மத்தியிலும் இன்றும் பிறப்ப தாகப் போதித்ததனை நாமுணருகிறோமா?

குழந்தை இயேசு பிறந்ததும் கொல்லத் தேடிய ஏரோது, இரு வயதிற்குட்பட்ட அப்பாவிக் குழந்தைகளைக் கொலை செய்தான். வேண்டாக் கர்ப்பத்தால் உருவாகும் பச்சிளம் சிசுக்களைக் கருவறையிலேயே கல்லறைக்கு அனுப்பும் ஏரோதுக்கள் எம்மிடையே இல்லை யென்போமா?

தனக்கு நிகரான அரசன் பிறந்ததாக ஏரோது கேள்விப்பட, முழு எருசலேமுமே அவனோடு கலங்கியது. இன்றும் பல நாடுகளில் அதிகாரம் செலுத்தும் ஆளும் இனம், தமது சிறுபாண்மை இனத்தவரைப் படுகொலை செய்வதைக் கேள்விப்பட்டு ஐக்கிய நாடுகளே கலங்கவில்லையா?

குழந்தை இயேசுவைத் தரிசிக்க ஞானிகள் வழிதேடி ஏரோதுவிடம் சென்றபோது, உதவி செய்வதாக ஏமாற்றி னான். இன்றும் எம்மிடையே நல்ல செயல்களைத் தடுக்க வெனப் பல ஏரோதுக்கள் இணைந்து, நல்ல முயற்சி களைத் திசை திருப்பிக் குழப்புவதில்லையா?

பாலகன் இயேசுவின் பிறப்பு மிக எளிமையானதாகும். இன்றைய உலக மயக் களியாட்டங்கள், ஒருபால் திரு மணம், விவாகரத்து, திருமணம் செய்யாது கூடிவாழுதல் என்று கிறிஸ்து பிறப்பின் விழுமியங்களை இழந்த எம்மி டையே கிறிஸ்து ” அர்த்தமுள்ளதாகப் பிறப்பது“ எப்போது?

ஆண்டவர் இயேசுவினுடைய பிறப்பு விடுதலையும், சமாதானமும் மட்டுமல்ல, பாவத்தின் அடிமையில் வாழ்வோர் விடுதலை பெறவும், ஏழைகள், புறந்தள்ள ப்பட்டு ஒதுக்கப்பட்டோர் மறுவாழ்வு பெற்று அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதாகும். நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் “நான், என்னுடையது“ என்பது தவிர இவ்வாறான விழுமியங்கள் வாழப்படுகின்றதா?

ஆண்டுகள் பல கடந்தும், ஆண்டவர் இயேசுவின் பிறப்பு இன்று உலகம் முழுவதும் அர்த்தமின்றிக் குடியும் கும்மாளமும், விநோதமுமாகி, கிறிஸ்மஸ் தாத்தாவே பணம் வசூலிப்பவராக மாற்ற மடைந்து, கிறிஸ்து பிறப்பின் அர்த்தமே குழிதோண்டிப் புதைக்கப்படும் நிலையில், கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் எமது உள்ளங்கள் மாற்றமடைந்துள்ளதா?

வானளாவக் கிறிஸ்மஸ் மரங்கள் உயர்ந்தாலும், எமது உள்ளங்கள் மனித மான்பை உயர்த்தும் எண்ணக் கருத்துக்களால் உயர்ந்துள்ளதா? ஏழைகள் ஏழைகளாகத் தொடர்ந்து வாழ, செல்வந்தர் செல்வம் பெருக்கும் நோக்கத்தில் முன்னேற, ஒரு நேர உணவுக்காக ஏங்கு வோர் எம்மிடையே இல்லை என்போமா? அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பு விழாவைக் காண, எமது வெளிவேடக் கிறிஸ்தவ வாழ்விலிருந்து புதுப்பிறப்பெடுப்போம்.

"மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்“ – (மத்தேயு 25:41)

Aucun commentaire:

Enregistrer un commentaire