முகப்பு

mardi 19 janvier 2016

மன்னிப்பு மகத்துவமானது!


மன்னிப்பு மகத்துவமானது!

வீல் சேரில் அமர்ந்திருந்தாள் அந்த ஐந்து வயதுச் சிறுமி கேய் லீ ஹேரியட்.

இடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகர நீதிமன்றம்.

2003-ம் ஆண்டில் அவளுக்கு மூன்று வயதாக இருக்கும்போதுதான் அந்தத் துயரம் நடந்தது.

ஒரு நாள் கேய் தனது சகோதரியுடன் உற்சாகமாய்ப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தபோது மூன்று இரக்கமற்ற துப்பாக்கிக் குண்டுகள் எங்கிருந்தோ பறந்து வந்தன. அவளுடைய முதுகெலும்பை உடைத்தன. உற்சாகப் பறவைக்கு வீல் சேர் வாழ்க்கையானது.

நீதிமன்றத்தில் அவளுக்கு முன்னால் நின்றிருந்தான் இருபத்து ஒன்பது வயதான ஆண்டனி வாரன். நீதிமன்றம் அவனைக் குற்றவாளி என தீர்ப்பிட்டது.

சிறுமி கேய் அவனருகில் சென்றாள். திடீரென தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். பார்த்தவர்களெல்லாம் கலங்கினார்கள். பின் சிறுமி அவனிடம் சொன்னாள், 'நீங்கள் செய்தது தவறு. ஆனாலும் உங்களை நான் மன்னிக்கிறேன்.'

ஐந்து வயதுச் சிறுமியின் அச்செயல் அந்த நீதிமன்றத்தையே நிலைகுலைய வைத்தது. பார்த்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் நெகிழ்ந்தார்கள். அதுவரை சுட்டவன் மீது கொடும் பகையுடன் இருந்த அவளுடைய தாயும் உடனடியாக அந்த நபரை மன்னித்தார்!

இந்த நிகழ்வு அமெரிக்காவின் அனைத்துத் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகி பலரையும் தொட்டது.

மன்னிப்பு எனும் வார்த்தை மனிதகுலத்துக்கே உரிய மகத்துவமானது. மிகவும் எளிதாகச் செய்யக் கூடிய இந்தச் செயலைச் செய்வதில்தான் இன்று பலருக்கும் உலக மகா தயக்கம். அதனால்தான் நமது வாழ்க்கை சண்டை, அடிதடி, வெறுப்பு, கோபம், நோய்கள் என துயரத்தின் தெருக்களில் நொண்டியடிக்கிறது.

ஒருவர் உங்களைப் பற்றி ஏதோ தவறாகச் சொல்லி விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபர் மீது நீங்கள் கோபம் கொள்ளும் போது உங்களுடைய மனதில் ஒரு கல்லை வைக்கிறீர்கள். அது கனக்கிறது. அந்தக் கோபத்தை மீண்டும் மீண்டும் நினைக்க நினைக்க ஒவ்வொரு கல்லாய் அடுக்குகிறீர்கள். பாரம் கூடுகிறது, உடல் நிலை பாதிக்கிறது. ரத்த அழுத்தம் எகிறுகிறது. எல்லை மீறினால் மாரடைப்பே வந்து விடுகிறது.

ஆனால் இந்த நிகழ்வின் துவக்கத்திலேயே நீங்கள் அந்த நபரை மன்னித்துவிட்டால் அத்துடன் சிக்கல்கள் எல்லாம் முடிந்து விடும்.

மன்னிக்கத் தெரிந்த மனிதர்கள் ஈகோ எனும் எல்லைக்கு வெளியே நின்று வாழ்க்கையை அதன் அழகியலில் லயிப்பவர்கள். மனிதத்தின் புனிதமான பாதைகளில் பயணிக்கும் பாதங்கள் அவர்களுடையவை.

மன்னிப்பது கோழைகளின் செயல் என பலரும் நினைக்கிறார்கள். 'எதிரி நாட்டு மன்னனைப் போரிட்டு அழிக்கும் பரம்பரை நாம்' என மீசை முறுக்குகிறார்கள். உண்மையில் மன்னிப்பது தான் போரை விட வீரமானது. போர் உடல்களைத்தான் வெற்றி கொள்ளும், மன்னிப்பு மனதையே வெற்றி கொள்ளும். இதைத்தான் மகாத்மா சொன்னார், 'மன்னிப்பு பலவான்களின் செயல், பலவீனர்களால் மன்னிக்க முடியாது.'

நீங்கள் ஒரு நபரைப் பார்த்துக் கத்தியால் குத்தினால் அவருக்குக் காயம் ஏற்படும். ஆனால் ஒரு நபர் மீது கோபமாய் இருக்கிறீர்களென்றால் அவருக்கு எதுவும் நேராது. மாறாக அந்தக் கோபம் உங்களுக்குத்தான் கெடுதல் உண்டாக்கும். நீங்கள் யார் மீது கோபமாய் இருக்கிறீர்களோ அவர் இதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். எனவே மன்னிப்பு என்பது முதலில் உங்களுக்கு நீங்கள் செய்யும் நல்ல செயல் என்பதை உணருங்கள்.

பல வேளைகளில் தவறிழைக்கும் நபர்கள் தவறை உணர்ந்து தட்டுத் தடுமாறி மன்னிப்புக் கேட்பதுண்டு. அப்படிப்பட்டவர்களை நிபந்தனையற்று மன்னியுங்கள். 'சே... இதுல மன்னிப்பு கேக்க என்ன இருக்கு' என்பது போன்ற வார்த்தைகள் நட்பையும், உறவையும் பலமடங்கு இறுக்கமாக்கும்.

சிலர் மன்னிப்புக் கேட்க தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களுடன் பழகும்போது எந்த வித்தியாசமும் இல்லாமல் பழகுங்கள். அவர்களை மனதார மன்னித்துவிட்டதைச் செயல்களில் காட்டுங்கள். மன்னிப்புக் கேட்கும் முன்னாலேயே மன்னிப்பது உயர்ந்த நிலை!

இன்றைய மனித உறவின் பலவீனங்கள் பலவேளைகளில் திடுக்கிட வைக்கின்றன. பெற்றோரை மன்னிக்க மறுக்கும் பிள்ளைகள், பிள்ளைகள் மீது வெறுப்பு வளர்க்கும் பெற்றோர், அரிவாளுடன் அலையும் சகோதரர்கள், வன்மத்துடன் திரியும் தம்பதியர்!

இவை எல்லாவற்றுக்குமான சர்வ ரோக நிவாரணி மன்னிப்பு என்பதை உணர்கிறீர்களா?

தவறே செய்யாத மனிதர்கள் இருந்தால், அவர்கள் மன்னிப்பு வழங்கத் தேவையில்லை. நாம் தவறும் இயல்புடையவர்கள் எனும் உணர்வு நமக்கு இருந்தால் மன்னிப்பு வழங்க மறுப்பதில் அர்த்தமில்லை!

மன்னிப்புக் கேட்கும் போதும் அடுத்தவரைக் குற்றம் சாட்டும் மனநிலையுடனோ, பழி போடும் மனநிலையுடனோ, ரொம்பவே தற்காப்பு மனநிலையுடனோ பேசாதீர்கள். 'செய்தது தவறு... வருந்துகிறேன்...' எனும் நேர்மையுடன் பேசுங்கள். உடனடியாக மன்னிப்புக் கிடைக்கவில்லையேல் பதட்டப்படாதீர்கள். சில ஈகோ பார்ட்டிகள் மன்னிப்பு வழங்க நேரம் எடுத்துக் கொள்வார்கள் என்பதை மனதில் இருத்துங்கள்.

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது கதிகலங்க வைக்கிறது. 'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள். மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன. `ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?

விடை தெரிய வேண்டுமெனில் தினசரியைப் புரட்டினாலே போதும்!

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது. மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும். குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.

உயிரில் உலவும் உள்ளன்பு
மலர்ந்து வருதல் மன்னிப்பு!

Aucun commentaire:

Enregistrer un commentaire