முதல் வணக்கம் இடும்பனுக்கே
-
தைப்பூசம் என்றாலே, பழநியும், காவடியாட்டமும் தான் நினைவுக்கு வரும். இந்தக் காவடியை, முதன்முதலாக முருகனுக்கு காணிக்கை செலுத்தியவன், இடும்பன். முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன் மற்றும் சிங்கமுகன் போன்ற அசுரர்களுக்கு, வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் இடும்பன். இவனும், இவனது மனைவி இடும்பியும் சிறந்த சிவபக்தர்கள்.
-
சிவசக்தி சொரூபங்களாக விளங்கிய சிவமலை மற்றும் சக்திமலையை, தன் பூஜைக்காக முருகப் பெருமானிடம் கேட்டார் அகத்தியர். முருகப் பெருமானும் அவற்றைக் கொடுக்க, கேதார்நாத்தில் உள்ள பூர்ச்சவனம் என்னும் இடத்தில் அம்மலைகளை வைத்து, வணங்கி வந்தார் அகத்தியர். இந்நிலையில், அவர் பொதிகை மலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அங்கு சென்று விட்டார்.
-
பொதிகையில் வன சஞ்சாரம் செய்து வந்த இடும்பன், அகத்தியரைக் கண்டான். அவரிடம் முருகப் பெருமானின் தரிசனம் பெற விரும்புவதாகக் கூறினான். அசுரர்களின் குருவாயினும், அவனது பக்தியை அறிந்த அகத்தியர், 'கேதார்நாத்திலுள்ள சிவமலை மற்றும் சக்தி மலையை பொதிகைக்கு கொண்டு வந்தால், முருகனின் தரிசனம் கிடைக்கும்...' என்றார்.
-
இதனால், இடும்பனும், அவன் மனைவியும் கேதார்நாத் சென்று, மலைகளை தூக்குவதற்கான சக்தி வேண்டி, சிவனை நோக்கி தவமிருந்தனர். அப்போது, பிரமதண்டமும் (கம்பு), எட்டு ராட்ஷச நாகங்களும் அங்கே தோன்றின. பாம்புகளை கயிறாக்கி, மலைகளை பிரம தண்டத்தின் இருபுறமும் காவடி போல் கட்டி, அதைச் சுமந்தபடி, பொதிகை மலை நோக்கி நடந்தான் இடும்பன். பாரம் அதிகமாகவே, பழநியின் அன்றைய புராணப் பெயரான திருவாவினன்குடியில் இறக்கி வைத்தான்.
-
பின், மீண்டும் தூக்க முயன்ற போது, அவனால் முடியவில்லை. அப்போது, சிவமலையின் மீது, சிறுவன் ஒருவன் விளையாடுவதைப் பார்த்து, அவனை மலையில் இருந்து இறங்கும்படி சொன்னான் இடும்பன். சிறுவன் மறுத்ததுடன், 'இது நான் தங்கப் போகும் மலை...' என்று வாதிட்டான்.
-
இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, தன் கையில் இருந்த தண்டத்தால், இடும்பனை லேசாகத் தட்டினான் சிறுவன். அந்த அடியைத் தாங்க முடியாமல், கீழே விழுந்து இறந்தான் இடும்பன். அதைப் பார்த்து அழுது புலம்பிய இடும்பி, சிறுவனின் காலில் விழுந்தாள்.
-
அச்சிறுவன், முருகனாக காட்சி தந்து, இடும்பனை எழுப்பி, 'இடும்பா... இம்மலையின் இடையில் நீ நிற்க வேண்டும். பக்தர்கள் எனக்குரிய வழிபாட்டு பொருட்களை, உன்னைப் போன்று காவடி தூக்கி எடுத்து வருவதுடன், உன்னை வழிபட்ட பின்னரே, என்னை வழிபட வேண்டும்; உன்னை வணங்கியவர்கள், என்னை வணங்கிய பலனைப் பெறுவர்...' என்று கூறி அருள்பாலித்தார்.
-
கடந்த, 2000ம் ஆண்டில் பழநிமலை எதிரிலுள்ள மலையில், இடும்பனுக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டது. 13 அடி உயரத்தில், இடும்பன் காவடி தூக்கி வருவது போன்ற சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டது. 540 படிகள் ஏறினால் தான், இடும்பனை தரிசிக்க முடியும்.
-
பகவானை விட, பக்தனே உயர்ந்தவன் என்று தன் நிலையை விட்டுக் கொடுத்த அருள் தெய்வம் முருகன். பழநி சென்றால், இடும்பன் மலைக்கு செல்ல தவறாதீர்கள்!.
Aucun commentaire:
Enregistrer un commentaire