முகப்பு

jeudi 19 juillet 2012

காதலின் சிறப்பு..!


காதல் அற்புதமானது...உண்மை
... காதலாக இருந்தால்..?
காதல் ஒருமலரின்
மகரந்த சேர்க்கைபோல்
அவசர அவசரமாக ..
சில நிமிடங்களுக்குள்
கட்டப் படுவதல்ல ..

காதல் ஒரு தேன்கூடு!
கோடிக்கணக்கான வண்டுகள்
தமது உள்ளத்தில் குடியிருக்கும்
ராணிக்காக
மாதக் கணக்கில்
அல்லும் பகலும்
உழைத்து
சிறுகச் சிறுக
சின்னத் தும்பிகளால்
கொண்டுவந்து சேர்க்கும்
தேன்துளியின் உழைப்புத்தான்
காதலின் உயிர்ப்பு..!

ஒருதலைக் காதலாக இருந்தாலும்
அந்தக் காதல்
வலிமையானது..
காலமெலாம் நிலைத்து நிற்பது!

கடற்கரையோரம் ..
கடலுக்குப் போன காதலன்
திரும்பி வருவரையும்
கண்ணுறங்காமல்
கஞ்சிக் குடுவையுடன்
காத்திருக்கும் அந்தத்
தவிப்புத்தான்
காதலின் சிறப்பு..!

குருவிகளில் ஒருஇனம் உண்டு
இணையிரண்டும் சேர்ந்து
கூடு கட்டும்
பெண்ணவள் முட்டையிட்டதும்
தன்னவள் களைத்துவிட்டாள்
எனவறிந்து..
ஆண்குருவிதான் இறுதிவரை
அடைகாக்கும்...

ஆகா..எத்தனை
இதமான காதல் இது..?
துன்பத்தை பகிர்ந்து கொள்ளும்
தூய காதல் இது..!

என்பது வயதிலும்
இணைபிரியாமல்
இறுதிவரை சேர்ந்து
வாழும் அந்த
முதுமைத் தம்பதிகள்
ஒருவருக்கு ஒருவர்
ஊன்றுகோலாய்
வாழ்வதுவதுதான்
காதலின் மகிமை..!

காதல்..உடலின்
சுகம் அறியாதது..
உள்ளத்தின் நாதக் கம்பிகள்..
ஒன்று சேர்ந்து ஒலிக்கும்
ஒப்பற்ற சங்கீதமே ..காதல்!

Aucun commentaire:

Enregistrer un commentaire