முகப்பு

mardi 3 mai 2016

மனைவி நல வேட்பு! (Wife Appreciation!)



மனைவி நல வேட்பு! (Wife Appreciation!)
.
கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது.
அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன்; அவனைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றான். அறிவிற் குறைந்த அந்தக் கணவன் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான்.
எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் அறிவிலிக் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான்.
போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.
அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து, ''அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய் - ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய் - கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய் - இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்; அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்'' என்றான்.
அறிவிலிக் கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என் மனைவியை அறிவேன், என்றான்.
தான் சொல்வதுதான் நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். நடந்தால் அறிவிலிக் கணவன் அவனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிடவேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிடவேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிக்குத் திரும்பினர்.
அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான்.
அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து "அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?'' என்று அன்பொழுகக் கேட்டாள்.
பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி.
பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டான்.
மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, ''என்னடா உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?' என்று கேட்டான்.
''அப்படியொன்றுமில்லை. என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப்பிறர் முன்னால் காட்டிக்கொள்ள மாட்டாள். நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்'' என்றான் அந்த அறிவிலிக் கணவன்.
.
"உன் கண்ணில் நீர் வழிந்தால்......" கவியரசரின் பாடல் நாம் அறிந்ததே, எனினும் மனைவியின் தியாகத்தைப் போற்றி எத்துனைபேர் உணர்ந்து மதிக்கிறோம்?.
"கணவன், மனைவி இருவரும் ஒருவர் வினையை இன்னொருவர் கூட இருந்து தூய்மை செய்து வாழ்வதே இல்லறம். இருவரிடையே பிணக்கு வரக் கூடாது. மன அலையை குறைத்து தியானம் பழக அமைதி அலை நிலைத்து விடும், சிந்தனை சிறக்கும், வெறுப்பு உண்டாகாது. அன்பும், கருணையும் தழைக்கும்.சிறு தவறுகளை மன்னிக்கும் தன்மை மேம்படும். ஒருவருக்கொருவர் என்ன தேவையோ அதைச் செய்யும் மனம் உண்டாகும்" என்றும், சினம், கவலை, ஏமாற்றம் வெறுப்பு முதலியன வாழ்க்கைத் துணையை துன்பம் கொள்ளச் செய்வதை உணர்ந்து கணவன்மார் அனைவரும் திருந்த வேண்டும் என்கிறார் மகரிஷி.
மனைவியைப் பற்றற்ற துறவி எனக் கூறிய மகான் அவர். இதை எத்துனைபேர் உணர்ந்து செயல்படுகிறோம் என்பதே இன்றைய கேள்வி!
.

Aucun commentaire:

Enregistrer un commentaire