ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.
ஒவ்வொரு நாளும் கடையை மூடப்போகும் சமயம், ஒரு தலைக்கனம் பிடித்தவன் அக்கடைக்கு வந்து, கடைக்காரரிடம், "முதலாளி, மூளையிருக்கா...?" என்று கேட்பான்.
அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், “என்ன முதலாளி, இன்றும் உங்களிடம் மூளை இல்லையா?” என்று கிண்டலுடன் கேட்டுவிட்டுச் செல்வான்.
இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது தானும் மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்று அந்தக் கடைக்காரரும் நினைத்துக் கொண்டிருந்தார்.
நாட்கள் நகர்ந்தன.
ஒருநாள் அக்கடைக்காரருடன் நன்கு படித்த நண்பர் ஒருவர் அக்கடைக்கு வந்தார்.
அவரிடம் அந்தக் கடைக்காரர் தினமும் ஒருவன் தன்னைக் கேலி பேசி வருவதைச் சொன்னார்.
இதைக் கேட்ட கடைக்காரரின் நண்பர், "அட இவ்வளவு தானே, இதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
கடையை மூடப்போகும் சமயம், அந்தத் தலைக்கனம் பிடித்தவன் வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா...?" என்று வழக்கம் போலக் கேட்டான்.
அதற்குக் கடைக்காரரின் நண்பர் அவனைப் பார்த்து, "இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை" என்றான்.
தலைக்கனம் பிடித்தவனுக்கு உச்சந்தலையில் யாரோ குட்டியது போலிருந்தது. நண்பனின் சாதுர்யமான பதிலைக் கேட்ட கடைக்காரர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது.
Aucun commentaire:
Enregistrer un commentaire