முகப்பு

lundi 12 octobre 2015

என்றான் அவன்

எல்லாவற்றையும் துறந்து விடு என்று ஒரு குரு சொல்லக் கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தான்.
அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது.
ஊரார் என்ன இது? இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க "எலி கடித்து விட்டது" என்று பதில் சொன்னான் அவன்.
ஊரார், "அந்த எலியிடமிருந்து பாதுகாப்பிற்காக ஒரே ஒரு பூனை வளர்க்கலாமே?" என்றார்கள்.
அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியைக் கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான்.
ஊரார், "ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே" என்று பசு மாட்டைத் தானமாக அளித்தார்கள்.
மாடு வந்தது. புல் தேவையாக இருந்தது. புல்லுக்காக தினம் ஊருக்குச் செல்ல ஆரம்பித்தான். இதற்காகவா இங்கு வருகிறாய், ஒரு கால் ஏக்கரா நிலம் வைத்துக்கொண்டு புல் பயிரிடேன் என்று புறம்போக்காக இருந்த நிலத்தைக் கொடுத்தார்கள்.
நிலத்துக்கு வேலி, பால் கறக்க ஒரு இடையன், அவனுக்குச் சோறு, அதற்காகக் குடும்பம். என்று குரு சிஷ்யனை வந்து பார்த்த போது அவனைச் சுற்றி ஒரு பண்ணையே செழித்திருந்தது. இதைப் பார்த்த குரு, "மனைவி, மக்கள், சுற்றம், ஆட்கள், நிலம், மாடு, மனை என்று எல்லாம் சேர்ந்து விட்டாயே எப்படி?" என வினவினார்.
"சுவாமி எல்லாம் இந்த ஒரு கோவணத்துக்காக... " என்றான் அவன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire