முகப்பு

mardi 15 mai 2012

முள்ளிவாய்க்கால்


பாலைமரக் கிளிகளே!
பாசமுடன் பாடும் பறவைகளே !
சோலையதை விட்டெங்கே
சென்றீர்கள்?

                   பாவியரின் 'பொமபரினால்' .
பாலைமரம்..வீரைமரம் எல்லாம்
வேரோடு சாய்ந்து விழுந்தன..!
தாவியதில் ஏறும் மந்தியினம்
கூவிவந்த குண்டுகளால்
அழிந்தன..!

பாட மறந்தன குயில்கள்.
ஆட மறந்தன மயில்கள்
ஓட மறந்தன மான்கள்
காடுதரும் சுகத்தில்
களித்திருந்த
காடைகளும்..சேவல்களும்
பாடையிலே ஏறி
பறந்தன!
                                     
தேன்தேடும் வண்டினம்
வான்கூவி வந்த
'பொஸ் பரசால்'
தாம் கூடும் கானகத்து
மரக்கிளையில்
எரிந்தன !

கூழைக் கடாக்கள் ....
கட்டிய கூடுகளில்...
சிறகு முளைக்காத
சிறுகுஞ்சுகள்
பாவியர்..
கொட்டிய குண்டுகளால்
பொசுங்கின..!
 
பச்சைப் புற்கள்கூட
பற்றி எரிந்த கொடுமையை
பாத்தவர் மனமெல்லாம்...
பற்றி எரிந்தது !
                                       
அக்கராயன் குளத்துக்
கரையெங்கும்
மரக்கிளையில்
அழகழகாய் கட்டி வைத்த
செந் நாரைக் கூடுகள்..
கொடியவரின்
வானூர்திக் குண்டுகளால்
பிய்த்து எறியப் பட்டன !
 
எத்தனைக்கும் மேலாய்
எம்மினத்து மக்களோ
கொத்துக் கொத்தாய்
பூக்கும்
பொன்னலரி பூக்களென..
பிடுங்கி எறியப்பட்டு..
வீதியெல்லாம் ..
செத்தழிந்த காட்சிகண்டு
மனம்
பித்தாகிப் போனதன்றோ.?

                                   

முள்ளிவாய்க்கால்
முடிவென்று சொன்னவரைக்
கண்டால்
தள்ளிவிழுத்தி புள்ளியிடு
அவர் நெற்றியில்.!
முடிவல்ல மூடா
அது புதிய
நாடொன்றின்
தொடக்கமென்று
நாமம் எழுதடா
அவர் நெற்றியில்.!
 

Aucun commentaire:

Enregistrer un commentaire