முகப்பு

vendredi 23 décembre 2016

ஆழிப் பேரலையின் அழியா நினைவுகள்



ஆழிப் பேரலையின் அழியா நினைவுகள்
(அகவைகள் பதின்மூன்றில் ஒரு ஏதிலியின் அவலக்குரல்)
எம்மிடையே இரு உலக மகா யுத்தங்கள் வந்து போனாலும், இன்னமும் பல்வேறு யுத்தங்கள் வெவ்வேறு வடிவங்களில் எம்மிடையே தொடர்கின்றன. காலத்திற்குக் காலம் இயற்கை அழிவுகள் எற்பட்டாலும், ஆழிப்பேரலையின் கொடூரச் சாவின் பிடியில் சிக்கி உயிர் தப்பியவர்கள் வாழ்வைப் பற்றிய உண்மையை உணர்த்தியதை வரலாற்றில் என்றுமே, எவருமே மறுக்கவோ, அல்லது மறைக்கவோ முடியாது.
பூமிப்பந்தின் வரலாற்றில் கடந்த 2004 டிசம்பர் 26ல் தென்னாசியக் கடற்கரையோரங்களைத் (இந்தோனேசியா, இந்தியா உட்பட இலங்கை வரை), தனது கொடூர அரக்கத்தனத்தால், கண் இமைக்கும் நேரத்தில் அழித்து, மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களை கொடூரமாகப் பலியெடுத்த “சுனாமி” எனப்படும் பயங்கர அரக்கனான ஆழிப்பேரலையை எம்மிலே யார்தான் மறக்க முடியும்?
பயங்கரக் கொடூரம் நிறைந்த சுனாமியால், கணவனை, மணைவியை இழந்தோர், பெற்றோரைப், பிள்ளை களைப் பறிகொடுத்தோரெனப் பல இலட்சக் கணக்கானோரின் பதறியழும் சோகக்கதைகள் சொல்லிலோ அல்லது எழுத்திலோ விபரிக்க முடியாதது. மக்களது உயிரிழப்புக்களோடு, பாரம்பரிய வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கும் மிகப்பெரிய அழிவோடு, பொருட்சேதமும் ஏற்பட்டது.
கடல் நீர் கழுத்தளவு வருவதனைக் கண்டுள்ளோம். ஆயினும் கரும்பைனையளவு உயரத்திற்கு மேலாக வந்ததனை கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்திகதி காலையில் தெற்காசிய நாடுகளின் பல இலட்சக் கணக்கான மக்கள் கண்டு பயப்பீதி அடைந்தது மட்டுமல்ல, மரணித்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட கொடூரச் சோகம் நிறைந்த அழியாத உண்மையாகிவிட்டது.
தென் ஆசியப் பிராந்தியத்தில் இப்பேரலையால், ஒருசில மணித்துளிகளில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்கள் அநியாயமாகக் கொண்று குவிக்கப்பட்டு. ஒருசில ஊர்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவிற்கு மாறி உள்ளதாகப் பல ஊடகங்கள் கருத்துத் தெரிவித்ததில் தவறேதுமில்லை.
குடியிருந்த வீட்டோடும், கூண்டோடும் மட்டுமல்ல, ஊரோடு சேர்ந்து இலட்சக் கணக்கானோர் அநியாயமாகக் கொல்லப்பட்ட கதை அறியாதார் யாருண்டு? ஊரும் போய், பழகிய முகங்களெல்லாம் பார்க்குமிடமெல்லாம் பல்வேறு திசையில் சடலமாகி, இதையெல்லாம் பார்க்கத்தானா என்னையும் விட்டுவைத்தாயென? நேரில் சந்தித்தவர்கள் இன்னமும் கதறியழுவதனை நாம் கண்டுணராது வாழமுடியுமா?
கண்ணைத் திறந்தால் வாழ்வு கண்ணை ழூடினால் சாவு, என்று கண்ணிமைப் பொழுதில் அகில உலகத்தையும் அடித்துப்புரட்டி, அதிர்ச்சிக்குள்ளாக்கிய பயங்கரக் கொடூரம் நிறைந்த இச் சம்பவத்தை சிலர் மறந்தாலும், இன்றும் எம்மில் பலரது உணர்வுகளை விட்டகலாதுள்ளது என்பது உண்மை.

Aucun commentaire:

Enregistrer un commentaire