முகப்பு

mercredi 2 mars 2016

வணக்கம்.

வணக்கம்.
தமிழர்கள் சொல்லும் ‘வணக்கம்’ பல்தரப்பட்ட பொருளினை உணர்த்துகின்றது. இறைவன் முதற்கொண்டு எளிய மாந்தர் வரையிலாக எல்லாரும் வணக்கம் என்னும் சொல்லுக்கு ஏற்புடையவராக உள்ளனர். இத்தகைய உயர்வுமிக்க கருத்தின் குறியீடாக வணக்கம் அமைந்துள்ளது.
இன்றைய நாளில் இச்சொல்லின் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு கலந்துவிட்டது. காலையில் சந்திக்கும்போது ‘காலை வணக்கம்’, மாலை நேரச் சந்திப்பின்போது ‘மாலை வணக்கம்’, பின்னர் இரவின்போது ‘இரவு வணக்கம்’ எனச் சொல்லும் வழக்கத்தைத் தமிழர்கள் கொண்டுள்ளனர். இவ்வாறு காலத்தை முன் வைத்து வணக்கம் சொல்லும் மரபு தமிழர்களுடையதன்று. இஃது ஆங்கிலேயரின் மரபாகும். ‘குட் மார்னிங்’ (Good morning), குட் ஆஃப்டர்னூன் (Good afternoon), குட் ஈவினிங் (Good evening) எனச் சொல்வது ஆங்கிலேயரின் வழக்கமாகும். இதனையே தமிழர்களும் பின்பற்றுகின்றனர். தமிழரின் பண்பாட்டுடன் ஆங்கிலேயர் பண்பாடு கலப்புற்றதால் ஏற்பட்ட விளைவு இது.
“இன்றைய காலைப்பொழுது நற்பொழுதாக அமையட்டும்”, என்னும் கருத்தினையே ‘காலை வணக்கம்’ என்னும் தொடர் உணர்த்துகின்றது. இத்தகைய வணக்கம் குறிப்பிட்ட ஓர் எல்லையைக் கொண்ட பொருளினை மட்டுமே உணர்த்துகின்றது. ஆனால், தமிழர்களின் வணக்கம் பரந்துபட்ட நிலையினைக் கொண்டிருக்கின்றது. தமிழர்களின் தனிப்பெரும் சிந்தனையும் பண்பாடும் சிதைந்துள்ளது. குறிப்பிட்ட காலத்தினை முன்னிட்டு வணக்கம் சொல்வது தமிழர் மரபன்று. ‘நீடுழி வாழ்க’, ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’, என வாழ்த்துவது தமிழர் மரபு. தமிழர்களின் வாழ்வியல் மரபுக்கு முரணாக ‘காலை வணக்கம்’, ‘மாலை வணக்கம்’ போன்ற தொடர்கள் அமைந்துள்ளன.
பிறருக்கு வணக்கம் சொல்லும்போது மனம் நிறைவு கொள்கின்றது. ஏற்றத் தாழ்வுகள் ஏதுமின்றி சொல்லப்படும் வணக்கத்தால் மனிதன் பண்பாளனாக ஆகின்றான். எளிய தமிழர் வாழ்வில் வணக்கம் தொடர்பான சில பழமொழிகள் உள்ளன. ‘வணங்கின புல் பிழைக்கும்’ என்பது தமிழ்ப் பழமொழிகளுள் ஒன்றாகும். இப்பழமொழியில் கையாளப்பட்டுள்ள வணக்கம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை உணர்த்துகின்றது. விட்டுக் கொடுத்து வாழ்வது மிக உயர்ந்த பண்பாட்டுக் கூறாகும்.
பகைவரும் நமக்கு வணக்கம் சொல்வர் என்னும் அரிய தகவலைத் தருகின்றது திருக்குறள். வில்லின் வணக்கம் என்பது தீமை செய்திடும். வில்லின் தன்மை வெளிப்படையாகத் தெரியக்கூடியது. ஆனால், பகைவரின் சொல் வணக்கம் அத்தகையதன்று. பகைவரின் வணக்கம் நன்மையளிக்க வல்லது என நம்பிடக்கூடாது. இக்கூற்றினைக் கீழுள்ள திருக்குறள் எடுத்துரைக்கின்றது.
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான் (குறள் 827)
அரசன் மக்களிடம் சொல்லும் வணக்கமும் மக்கள் அரசனிடம் சொல்லும் வணக்கமும் வேறுபட்ட பொருளினை உணர்த்துகின்றன. “என்னுடைய ஆட்சியில் நற்பேறு பெற்று வாழ்வாயாக”, எனும் வாழ்த்தின் குறியீடாக அரசனின் வணக்கம் அமைந்துள்ளது. “உங்கள் ஆட்சிக்கு உட்பட்ட இந்நாட்டில் நல்வாழ்வு பெற்றுள்ளமைக்காக என் நன்றியினைப் புலப்படுத்துகின்றேன்”, என்னும் பொருளில் மக்களின் வணக்கம் அமைந்துள்ளது.
தமிழர் வாழ்வியலில் ‘வணக்கம்’ எனும் சொல் குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமே பயன்படுத்துவதன்று. அரசன் முதல் ஆண்டி வரை எல்லாருக்கும் உரிய பொதுச்சொல்லாக வணக்கம் விளங்குகின்றது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire