முகப்பு

samedi 6 février 2016

நெஞ்சைத் தொட்ட கதை

        இது ‘சுட்ட’ கதை!! நெஞ்சைத் தொட்ட கதையும்கூட!!!
        அது பெரிய இடத்து மனிதர்களுக்கான ஒயின் கடை.
        நேரம், நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.
        ...
        கப்பல் மாதிரியான ஒரு காரில் வந்திறங்கினார் ஒரு தொழிலதிபர்; தனக்குத் தோதான இடத்தில் அமர்ந்தார். தனக்குத் தேவையானதை ஆர்டர் செய்துவிட்டுத் தற்செயலாகத் திரும்பியவர் திடுக்கிட்டார். காரணம்.....
        நான்கு இருக்கைகள் தள்ளி ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் கடவுள்! வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவராக இருந்தார் அவர்.
        கடவுள்கூட இங்கெல்லாம் வருவாரா என்று ஆச்சரியப்பட்டார் தொழிலதிபர்; அவருக்குக் காணிக்கையாக ஏதாவது செலுத்திப் புண்ணியம் தேடிக்கொள்ள விரும்பினார்; பணியாளரைக் கூப்பிட்டு, “அதோ அங்கே அமர்ந்திருக்கும் கடவுளுக்கு ஒரு கோப்பை மது கொடு. பில்லை என் கணக்கில் சேர்த்துவிடு” என்றார். பணியாளரும் அப்படியே செய்தார்.
        சிறிது நேரத்தில், இன்னொரு பெரிய மனிதர் வந்தார். அவரும் கடவுளை அடையாளம் கண்டுகொண்டு, பணியாளரிடம், “கடவுளுக்கு அரை பாட்டில் மதுவைக் கொடுத்துவிட்டுப் பில்லை என் கணக்கில் சேர்த்துக்கொள்” என்றார்.
        அடுத்து, ஒரு பெரிய அரசு அதிகாரி அங்கு வந்தார்; மற்ற இருவரைப் போல அவரும் கடவுளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “கடவுளுக்கு என் கணக்கில் ஒரு முழு பாட்டில் மதுவைக் கொடு” என்று பணியாளரிடம் சொன்னார்.
        நடந்தவற்றைக் கவனித்துக்கொண்டிருந்த கடவுள் இவர்களை அணுக, மூன்று பேரும் எழுந்து நின்று பவ்வியமாகக் கடவுளை வணங்கினார்கள்.
        ஒரு கோப்பை மதுவைத் தன் கணக்கில் கொடுத்த தொழிலதிபரின் தலையில் கை வைத்துக் கடவுள் ஆசீர்வாதம் செய்தார்.
        “ஆண்டவா, என்னே உன் கருணை! வருடக் கணக்கில் எனக்கிருந்த ஒற்றைத் தலைவலி பறந்துவிட்டது” என்று மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினார் அவர்.
        அடுத்ததாக, அரை பாட்டில் மதுவை அளித்த பெரிய மனிதரின் தோள்களில் ஆண்டவன் தம் கைகளை வைக்க, “தேவனே, பிறந்ததிலிருந்து விளங்காமலிருந்த என் ஒரு கை தங்களின் திருக்கரங்கள் பட்டதும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. என்னே உங்கள் கிருபை!” என்று மேனி சிலிர்த்தார்.
        கடவுள் மூன்றாமவருக்கு அருள்பாலிக்கத் தம் கையை உயர்த்தியபோது, “பகவானே, வேண்டாம். தயவு செய்து எனக்கு அருள்பாலிக்க வேண்டாம். நான் ஓர் அரசு அதிகாரி. உயர் பதவியில் இருப்பவன். உடல் ஊனமுற்றவர் கோட்டாவில் எனக்கு வேலை கிடைத்தது. தங்கள் கருணையால் என் கால் ஊனம் சரியாகிவிட்டால் என் வேலை போய்விடும்” என்று சொல்லி எகிறிக் குதித்து ஓடிவிட்டார் அவர்.
        “சே, நான் எல்லாம் அறிந்தவன் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். அது எவ்வளவு பெரிய தவறு” என்று முணுமுணுத்துக்கொண்டே இடத்தைக் காலி செய்தார் கடவுள்!

Aucun commentaire:

Enregistrer un commentaire