முகப்பு

mercredi 18 mai 2011

முள்ளிவாய்க்காலில் கண்ணீரோடு .................



முள்ளிவாய்க்காலில் நின்று வானம் அதிர குழறினோமே
ஐநாவின் காதுகளுக்கு விழவேயில்லையா 
ஆண்டுகள் ஆனாலும் நீதி சாகாது என்று கூறலாம்
அநியாயமாய் கொன்றொழித்த உறவுகள் திரும்பிவருவாரோ
அறிக்கையும் ஆய்வுகளும் கண்டனங்களும் கண்துடைப்புகள் தானோ
வெறும் வாய்பேச்சும் வீண் கதைகளும் பொய் வேசம் தானோ

கொன்றொழித்து எரியூட்டி சாம்பலையும் இருந்த தடத்தையும் இல்லாதொழித்த பின்
எதை வைத்து குற்றவாளி என்பீர் 
போரே நடக்கவில்லை என்பான்
குண்டே போடவில்லை என்பான்
யாரையும் கொல்லவில்லை என்பான்
சிறையில் யாரும் இல்லை என்பான் 
என்னை யாரும் புடுங்கேலாது என்பான் 
மகிந்தனை மயிர் நரைத்து கூன் விழுந்த பின்போ கூண்டில் ஏற்றுவீர்

சிங்களவன் கொன்றது ஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம் உறவுகளின் உயிர்கள்
அவன் இப்போதும் கொல்ல நினைப்பது
பலகோடி தமிழனின் தமிழீழ தாகத்தை

முப்பது ஆண்டுகளாய் வலி சுமக்கும் தேசம்

விடுதலையே மூச்சாக வாழும் மக்கள்
காற்றோடு கலந்தாலும் கடலோடு கரைந்தாலும்
மண்ணோடு புதைந்தாலும் அடங்காது எங்கள் தாகம்
விழுதுகளை வெட்டி எறிந்தாலும் வேரோடு புடுங்கி எறிந்தாலும்
மீண்டும் துளிர் விடும் விடுதலை வேட்கை
காலத்தால் அழியாத வலி வரினும் வலிமை கொண்டெழும் தன்மான உணர்வு
இழப்புகளை கண்டு இடிந்து போகாத இதயங்கள்
எதுவரினும் வீழ்ந்து கிடக்காத தமிழினம்

உலகமே உன் நாட்குறிப்பேட்டில் குறித்துவை
முள்ளிவாய்கால் என்பது குருதியில் தீக்குளித்த தேசத்தின் அடையாளம்
அது முடிவல்ல தமிழனின் தன்மானப்போரின் நான்காம் அத்தியாயத்தின் ஆரம்பம்
முள்ளிவாய்க்காலில் கண்ணீரோடு விதைத்தோம்
தமிழீழத்தில் கெளரவத்தோடு அறுவடை செய்வோம்

Aucun commentaire:

Enregistrer un commentaire